ஆஸ்கருக்கு செல்லவிருக்கிற சுத்தமான தமிழ்ப் படம்.
“ஒருவரே எழுதி இயக்கி,நடித்து தயாரித்த முதல் திரைப்படம்”என்று இந்திய மற்றும் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் படம்.
ரா.பார்த்திபன் என அடையாளம் காணப்பட்ட இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்.
தொப்புளும் தொடையும் கமர்ஷியல் அயிட்டங்கள் என்கிற மலிவான சிந்தனையில் ஊறிக் கிடந்த தமிழ்ச்சினிமாவில் இருந்து விலகி நிற்கிற ஒரு படைப்பாளனின் வெகுநாள் சிந்தனை,காத்திருப்புதான் இந்தப்படம்.
உலகநாயகன் கமல்ஹாசன் ,மக்கள் செல்வன் விஜயசேதுபதி இவ்விருவரைத் தவிர மற்ற எவரும் இத்தகைய படைப்புகளைத் தொடவே அஞ்சுவார்கள். பார்த்திபன் கடந்து சென்றிருந்த பாதையில் சில புதுமைப் படைப்புகள் முன்னமே வந்ததுண்டு.
முன்னொரு காலத்தில் அப்பத்தா,அம்மாச்சிகளிடம் கதை கேட்டு வளர்ந்தார்கள் .
இந்த காலத்தில் ஜேம்ஸ் பான்ட் கதைகளைக் கேட்டு வளர்கிறார்கள். அப்படி அடர்த்தியான மர்மக் கொலைகள் நான்கு எப்படி நடந்தது?
மாசிலாமணி ( பார்த்திபன்.) குற்றவாளி என போலீசில் பள்ளிக்குச்செல்லும் மகனுடன் மாட்டுகிறார்.விசாரணை நடக்கிறது.
உயரதிகாரி விசாரிக்கிறார்.இடையிடையே இன்ஸ்பெக்டரின் மிரட்டல்கள், இவைகளுக்கு இடையில் அதிகாரியின் மனைவியுடன் பேச்சு,மாசிலாமணியின் மனைவியும் பேசுகிறார். குருவிகளை மிரட்டும் பூனை, காலுக்கடியில் ஊறுகிற கரப்பான் பூச்சி ,மந்திரி இருக்கிறார்,கைத்தடிகள் இருக்கிறார்கள்.இப்படி கதை மாந்தர்கள் அனைவருமே பேசுகிறார்கள்.
ஆனால் முகம் தெரியவில்லை குரல் மட்டுமே தோரணை குறையாமல் கேட்கிறது. படம் முழுவதும் பார்த்திபன் மட்டுமே!
ஒரே ஒரு பொம்மையை வைத்து படம் முழுவதும் வீணை பாலசந்தர் மிரட்டி இருந்தார். எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தும் அந்த பொம்மை மட்டுமே ஈர்ப்பு சக்தியாக இருந்தது.
ஒத்த செருப்பில் பார்த்திபன் மட்டுமே ஈர்ப்பு சக்தியாக இருந்தாலும் பக்க மேளங்களின் துணையினால் இடை வேளைக்குப் பிறகு படத்தின் வேகம் அதிகரிக்கிறது.
கொலையின் மர்ம முடிச்சுகள் அவிழ்கிறபோதும் ,அதற்கான காரணங்கள் தெரிகிறபோதும் பார்த்திபனின் முக மாறுதல்கள் அருமை.அந்த முரட்டு முகத்தில் காதலின் மென்மை ,மகனின் மீதுள்ள பாசத்தின் மேன்மை ,மென்மையின் தன்மை மாறியதும் காட்டுகிற வன்மை நமக்கு மாறுபட்ட பார்த்திபனை காட்டுகிறது.
பார்த்திபனின் மனைவி உஷா இளையராஜாவின் ரசிகை என்பதை இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆங்காங்கே இரு பாடல்களை ஒலிக்க செய்திருப்பது முழுப்பாடலையும் கேட்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.
இத்தகைய படத்துக்கு பின்னணி இசை முதுகெலும்பிடையே ஊடுருவிச்செல்லும் நரம்பு போன்றது. நரம்பு அழுத்தப்பட்டால் தலைக்கு(கதை.) பாதிப்பு. சி.சத்யாவுக்கு வாழ்த்துகள்.
ஒலிவடிவமைப்பு ரசூல் பூக்குட்டி,அம்ரித் பிரிதம் இருவரும் காட்சிகளின் தன்மையை உயர்த்துகிறார்கள். ஒளிப்பதிவாளர் ராம்ஜி கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார். பார்த்திபனுக்கு மட்டுமே முக்கியம் காட்டாமல் எதிரில் இருக்கிற ( ! ) கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்திருக்கிறாரே …கடும் உழைப்பு.!
ஒத்த செருப்பு பார்த்திபனுடையது அல்ல.அவரது செருப்பின் அளவு 7 -ம் இல்லை. அப்படியானால் கொலை நடந்த இடங்களில் காணப்படும் செருப்புகள் யாருடையது. அப்படியானால் கொலையாளி யார் , மனைவியை கணவனே கொலை செய்தது ஏன்? மர்மத்தை தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார் பார்த்திபன்.
சினிமா முரசத்தின் மார்க்: 3 / 5