தயாரிப்பு : பா.ரஞ்சித்,. எழுத்து,இயக்கம் :அதியன் ஆதிரை. ஒளிப்பதிவு :கிஷோர் குமார், இசை : தென்மா. ,பாடல்கள் :உமாதேவி,தனிக்கொடி, அறிவு, முத்துவேல்
தினேஷ்,ஆனந்தி,ரித்விகா,முனீஸ்காந்த்,மாரிமுத்து,லிஜிஸ்,ஜான் விஜய்.
*****************
மாமல்லபுரம் கரையோரம் ஒதுங்கிய வெடிக்காத குண்டு ஒன்று பழைய இரும்பு மொத்த வியாபாரி மாரிமுத்துவிடம் போய் சேருகிறது. அது இரும்புக் கழிவுகளுடன் கலந்து லாரியிலேயே பயணமாகி எங்கெங்கோ சென்று விட்டு திரும்பவும் உரிய இடத்துக்கு வந்து சேருகிறது. இதுதான் கதையின் மையக் கருத்து.
இரும்புக் குப்பைகளுடன் குப்பையாக கிடக்கும் அந்த குண்டு வெடித்தால் அந்த ஏரியாவே படுநாசம் ,ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி என்பதை அறியாத கிளீனர் முனீஸ்காந்துக்கு அதன் மேல் இருக்கும் ஈயம் பித்தளை மீது ஆசை. வெல்டிங் வைத்துப் பிளந்தால் வெகு லாபம் பார்க்கலாம் என நினைக்கிறார்.
ஆயுத தரகர் ஜான் விஜய்க்கு எவனையாவது போட்டுத்தள்ளிவிட்டாவது அந்த குண்டுவை கைப்பற்றி விடவேண்டும், அதற்காக போலீசையே ஏவிவிடுகிறார். அவருக்கு அந்த குண்டுவின் மதிப்பு தெரியும்.
தான் ஏற்றிச்செல்லும் இரும்புக் கழிவு லோடில் எவ்வளவு பெரிய பேராபத்து படுத்துக் கிடக்கிது என்பது புரியாமல் லாரியை ஓட்டிச்செல்கிற தினேஷ் தான் கதையின் முதுகுத் தண்டு. இவருக்கு ஆனந்தியின் மீதான காதல்தான் ஆனந்த கீதம். இப்படியாக பல முனைகளில் சீராகப் பயணிக்கிறது திரைக்கதை.
முதன் முதலாக பழைய இரும்பு வணிகத்தை அடித்தளமாக வைத்து வெளியாகி இருக்கிற தமிழ்ப்படம். அங்கு வேலை பார்க்கிற தொழிலாளர்களின் நிலையை வெகு இயல்பாக பதிவு செய்திருக்கிறார்கள். காலே போனாலும் போகட்டும் கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்குப் போ என சொல்கிற முதலாளித்துவத்தை அசலாக்கி இருக்கிறார் மாரிமுத்து. முதலாளித்துவத்தில் சின்னது பெரியது என்பதெல்லாம் கிடையாது. முதலைக்கு ஆடு கிடைத்தாலும் தீனிதான் ,கோழி கிடைத்தாலும் தீனி தான்!அவனுக்கு இரை தொழிலாளியின் உழைப்புதான்.!உடம்பு எக்கேடு கேட்டால் என்ன? இயக்குநர் அதியனின் நடிகர் தேர்வு கதைக்கு வலுவேற்றியிருக்கிறது.
இதுவரை இப்படியொரு வாழ்வியல் பதிவில் அட்டகத்தி தினேஷ் நடித்ததில்லை. மனிதன் வாழ்ந்திருக்கிறான்!எத்தனையோ லாரி டிரைவர்களை தமிழ்ச் சினிமா பார்த்திருக்கிறது. அவர்கள் தங்களின் நடிப்பைத்தான் பதிவு செய்திருந்தார்கள். ஆனால் தினேஷ் மாதிரி கேரக்டராகவே மாறியதில்லை. எவரது உடல் மொழியையும் இரவலாக பெறவில்லை என்பது தினேஷின் வளர்ச்சிக்கு உதவி செய்யும்.
அடுத்து நினைவில் நிற்பவர் முனீஸ்காந்த். டிரைவராக உயர்வு பெற வேண்டும் என்பது கனவு. அதற்காக செல்கிற வழியில் சந்திக்கிற துயரங்கள், அவர்கள் சுமந்து சென்றது மிகப்பெரிய குண்டு என்பது புரிந்ததும் அடைகிற தடுமாற்றம், தவிப்பு, மீள வேண்டுமே என்கிற உயிர் மீதான ஆசை,அவருக்கும் அடுத்தக் கட்டத்துக்கான நகர்வு.
காதல் என்பது கதைக்கு அவசியம் இல்லை என்றாலும் அது இல்லாவிட்டால் ரசனையில் குறைவாகி விடும் என்பதால் ஆனந்திக்கும் தினேஷுக்கும் காதல் . .ஆனந்தி ஆசிரியை என்பதால் ஒரு லாரி டிரைவருக்கும் அவருக்குமான காதலை ஆனந்தியின் அண்ணன் ஏற்கவில்லை என்பதாக காட்டுகிறார்கள்.
கதையின் பெரும் பகுதி இரவில் நடப்பதால் கிஷோர்குமார் ஒளிப்பதிவில் தனிக்கவனம் செலுத்தியிருக்கிறார்.
கதை கம்யூனிசம் ஓரளவு சொல்கிறது. ரித்விகாவின் கேரக்டர் திணிப்பாகவே இருக்கிறது. அவர் கதைக்குள் இருப்பதற்காக சொல்லும் காரணங்கள் ஏற்கும் வகையில் இல்லை. கதை தேக்கமில்லாமல் விரைவதற்கு காட்சி அமைப்புகளும் காரணம். மிகப்பெரிய ஆபத்தினை விளைவிக்கும் அந்த குண்டு பற்றிய கவலை மத்திய அரசுக்கோ,மாநில அரசுக்கோ இல்லாததை போல ஒரு தோற்றம் பலவீனம்தான்!
வழக்கமான ஃ பார்முலாவை விட்டு விலகி வாழ்வியலை மய்யமாகக் கொண்டு வந்திருக்கிற ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு ‘வரவேற்கப் படவேண்டிய படம்.
இயக்குநர் அதியன் ஆதிரைக்கு வாழ்த்துக்கள்.!
சினிமா முரசத்தின் மார்க். 3.5 / 5