இயக்கம் : சஞ்சய் பாரதி, ஒளிப்பதிவு :பி.கே.வர்மா. இசை : ஜிப்ரான், பாடல்கள் : விவேகா,மதன்கார்க்கி, விக்னேஷ் சிவன் , கு.கார்த்திக், சந்துரு. வசனம் :எம்.ஆர்.பொன் .பார்த்திபன் .
ஹரிஷ் கல்யாண் , டிகங்கனா சூர்யவன்ஷி,ரெபா மோனிகா ஜான், யோகிபாபு, முனீஷ் காந்த்,பாண்டிய ராஜன்,சார்லி,மயில்சாமி,
***************
ராசி பலன்,பல்லி விழும் ஜோஷ்யம்,ராகுகாலம் எமகண்டம் இதெல்லாம் உயிர் வாழுகிற அளவுக்கு பாமரர்களும் வளருவார்கள். பஞ்சாங்கமும் இருக்கும். முட்டாள்த்தனமும் ஜீவனுடன் இருக்கும். எந்த ஜோதிடத்தை நம்பி இந்தப் படத்தை எடுத்தார்களோ!
தனுசு ராசிக் காரனுக்கு கன்னி ராசி பொண்ணு அமைஞ்சா வாழ்க்கை ஓகோன்னு இருக்கும் ,உன்னைத் தேடி வேற மாநிலத்துப் பொண்ணு வரப்போறான்னு திருமாணந்தா ஜோதிடர் சொன்னதை நம்பிய ஒரு ஆளை பற்றிய கதை.
ஹரிஷ் கல்யாண் தான் அர்ஜுன். இவருக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை. செவ்வாய்க்கிரகத்தில் செட்டில் ஆகப்போகிறேன் என்கிற டிகங்கனா சூர்யவன்ஷி இந்த ஆளிடம் ஒரு நாள் போதையில் உடம்பை கொடுத்து விட்டு செவ்வாய்க் கிரகமா, பூமியா என அலைபாய்கிறார். இந்த கேரக்டருக்கு எதற்காக கே.ஆர்.விஜயா என பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. உள் குத்து ஏதாவது இருக்குமோ? ஆள் நல்ல அம்சம். அங்க சாஸ்திரம் என்கிற சாமுத்திரிகா லட்சணம் தெரிந்த யாராவது இருந்தால் கேட்கலாம். எல்லாமே ‘அளவு ‘ எடுத்தது மாதிரி உடம்பு.! அர்ஜுன்-கே.ஆர்.விஜயா இவர்களை சுற்றித்தான் கதை. காமெடியாக சொல்ல நினைத்து சோகத்தை திணித்து ஒரு வழியாக ஒப்பேற்றி இருக்கிறார் இயக்குநர் சஞ்சய் பாரதி.
அடுத்த ரன்னிங் ரோல் முனிஷ் காந்துக்கு. தாய் மாமன் கேரக்டர். குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவுமில்லை. பிரியாணி பிரியர் என்பதற்கு ரூட் மேப் போட்டு காட்டியிருக்கிறார்கள்.
அந்த காலத்து ஊமைச் சினிமாவில் அடுத்தது இன்னின்ன காட்சிகள் வரும் என்பதை ஒருவர் இடையிடையே வந்து சொல்வாராம். அதை போல யோகிபாபுவுக்கு ஒரு வேலை.
ஜிப்ரான் இசையில் ‘இது என்ன விபரீதம் ‘பாடல் சுகம். பிகே வர்மா ஒளிப்பதிவு இதம். இருந்தும் என்ன செய்ய?
உங்கள் ராசி என்ன சொல்கிறது என்பதை எந்த ஜோதிடரிடம் கேட்கப்போகிறீர்கள்? ததாஸ்து.!