நடிகர் விஷால் நேற்று ராஜபாளையத்தில் பத்திரிக்கையாளர்களை“ மருது “ படப்பிடிப்பு தளத்தில் வைத்து சந்தித்தார் அபோது , ரசிகர்கள் நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் போன்ற நிகழ்வுகளை உடனே நிறுத்துங்கள் என ஆவேசமாக கூறினார் .இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகர் விஷால் கூறியதாவது,
சென்னை கனமழை மற்றும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக வடசென்னை பகுதி மிகவும் பாதிக்கப்படுள்ளது. சைதாபேட்டை பகுதியில் இன்னும் தண்ணீர் சுத்தமாக வடியாத நிலை உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை மற்றும் கடலூரில் வெள்ளத்தால் குடியிருப்பு மற்றும் சாலையில் உள்ள அனைத்து பகுதிகளும் மூழ்கியுள்ளது. எப்போதுமே இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால் சில பகுதிகள் மிக மோசமான பாதிப்பை அடைந்துள்ளது. சென்னையில் பிறந்து , சென்னையில் வளர்ந்த என்னால் இதை பார்த்து கொண்டு இருக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட அனைத்து இடத்திருக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி வருகிறோம். எல்லா நடிகர்களும் பொது மக்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர் , இது மிகவும் ஆரோக்கியமான விஷயம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வட சென்னை பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. திருவற்றியூர் , மணலி , வியாசர்பாடி போன்ற பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது , இதை சரி செய்ய வெகு நாட்கள் எடுக்கும். வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் அங்கே நிலவி வருகிறது , அவர்கள் அனைவரும் முதல் மாடிகளிலேயே தங்கி வருகிறார்கள். நான் முதலில் வடசென்னைக்கு சென்று அங்கே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முடிவு செய்தேன். அதன் பின் “ ரெஸ்க்யு சென்னை “ என்ற ஒரு குருப்பை ஆரம்பித்து அதன் மூலம் மக்களுக்கு உதவ முடிவு செய்தோம். லேடி ஆண்டாள் பள்ளியை மையமாக கொண்டு நாங்கள் இயங்கி வருகிறோம்.
எங்களுக்கு முன்வந்து உதவிய பள்ளி நிர்வாகத்துக்கு நன்றி. நாங்கள் அங்கே இருந்து இருநூறு லாரியில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தோம். லேடி ஆண்டாள் பள்ளியில் நிவாரண பொருட்கள் கிடைக்கிறது என்பதை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து பத்திரிக்கை , தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி. நேற்று மட்டும் நாங்கள் நூறு லாரி நிவாரண பொருட்களை சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு அனுப்பிவைத்துள்ளோம். நாங்கள் இன்னும் ஒரு குடோனை மைய பகுதியாக எடுத்துக்கொண்டு குறிஞ்சிப்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்து வருகிறோம். நான் வடசென்னை , சைதாபேட்டை பகுதிகளில் நிவாரண பணிகளை முடித்துவிட்டு குறிஞ்சிபாடி பகுதிக்கு சென்றேன் , அந்த கிராம மக்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறோம். இப்போது நாங்கள் லேடி ஆண்டாள் பள்ளியில் இருந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். பள்ளி தொடங்கும் பட்சத்தில் நாங்கள் வேறு இடத்திற்கு மாறி சென்று அங்கே இருந்து இயங்குவோம். லேடி ஆண்டாள் பள்ளியில் சுமார் நூறு தன்னார்வ தொண்டர்களுடன் அனைத்து நடிகர்களும் இயங்கி வருகிறார்கள். கார்த்தி , ஜெயம் ரவி , ஆர்யா , வரலக்ஷ்மி , அபிஷேக் , ஸ்ரீமண் முதலிய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் முனைப்புடன் நிவாரண பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பசுக்கள் , நாய்கள் போன்ற வாய் இல்லா ஜீவன்கள் பலவற்றையும் நாங்கள் காப்பற்றி வருகிறோம். எங்களுடன் அனிமல் ஆக்டிவிஸ்ட் பலர் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். மிருகங்களை காப்பாற்றுவதற்கான அமைப்பையும் நாங்கள் எங்களுடன் வைத்துள்ளோம்.
நான் தெலுங்கு மற்றும் மலையாள நடிகர்களுக்கு நிச்சயம் நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் உதவி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் அங்கே இருந்து பொறுப்புடன் நிதி திரட்டி அனுப்பி வருகிறார்கள். இதுபோக எல்லா தொண்டு நிறுவனத்தினரும் தங்களால் முடிந்த உதவியை முனைப்புடன் செய்து வருகின்றனர். சென்னை பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் முதலில் மழை நிற்க வேண்டும். வட சென்னை பகுதியில் அதிக அளவில் குப்பைகள் குவிந்துள்ளது. முதலில் அதனை அகற்ற வேண்டும். சில பகுதிகளில் மக்கள் போட்ட துணிகளுடன் இருந்து வருகிறார்கள். நாங்கள் மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் துணியை மாற்றவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு தேவையான உடைகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.
இதுவரை உதவி செய்து வருபவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் , மீதம் உள்ளவர்களும் மக்களுக்கு கண்டிப்பாக உதவ முன்வரவேண்டும். சென்னை மற்றும் கடலூரை சேர்ந்த மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியும் ஆதலால் நீங்கள் அனைவரும் உதவ முன்வர வேண்டும். படபிடிப்பு , நடிகர் சங்க பணி மற்றும் நிவாரண பணி என அனைத்தையும் மிகவும் ஈடுபாட்டுடனேயே செய்து வருகிறேன். நடிகர் சங்க கட்டிடத்திற்கான வேலைகள் துவங்கும் போது இவ்வளவு மழை பெய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரே நேரத்தில் மூன்று வேலைகள் செய்வதில் எனக்கு எந்த வலியும் இல்லை , அது என்னுடைய வேலை நான் செய்தே ஆக வேண்டும். மழையில் நடிகர் ராஜ்கிரன் , விக்னேஷ் , சிவகாமி அம்மாள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் பேமிலி கிட் ஒன்றை ஏற்ப்பாடு செய்து வழங்கவுள்ளோம். இதே போன்று பாதிக்கப்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நாங்கள் இதை நாங்கள் அனுப்பவுள்ளோம்.
இதே போன்று நற்பணி மன்றத்தினரும் வெள்ள நிவாரண பணியில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களிடம் நான் கட் – ஆவுட் முதலிய தேவையற்ற ஆடம்பரங்களை தவிர்த்து மக்களுக்கு உதவும் பணியை செய்யுமாறு அறிவுறுத்தி வருகிறேன். நற்பணியில் சிறப்பாக செயல்படும் என்னுடைய ரசிகர் நற்பணி மன்ற உறுப்பினர்களுக்கு நான் ரசிகனாக மாறுவேன் என்று நடிகர் விஷால் கூறினார்.