தனுஷ் ,சினேகா ,மெஹரீன் பிர்சாடா, நாசர் ,நவீன் சந்திரா ,முனீஸ்காந்த் ,சதிஷ் .
எழுத்து இயக்கம் :ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் ,ஒளிப்பதிவு :ஓம் பிரகாஷ் , இசை :விவேக் -மெர்வின் ,தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்.
**************
தமிழரின் தொன்மையான ‘அடிமுறை’ சண்டைக்கலையை மையமாக வைத்து கதை பண்ணியிருக்கிறார் இயக்குநர் துரை .செந்தில்குமார்.
தனுஷை நம்பி பண்ணிய கதை மாதிரி தெரிகிறது. இந்த கேரக்டருக்கு இவர்தான் பொருந்துவார் என காட்சிகளையும் அமைத்திருக்கிறார்கள். தனுஷ் ஏமாற்றவில்லை. மிகச்சிறப்பாகவே அவரது கேரக்டரை செய்திருக்கிறார். பெரிய இடைவெளிக்குப் பின்னர் வந்திருக்கும் சினேகா அழகான அருமையான அம்மா. நடிக்கத் தெரிந்த அம்மா. குரலை மட்டும் ஏற்ற இறக்கத்துடன் பேசிவிட்டுச் செல்லும் சினிமா அம்மாக்களில் உணர்வுகளை பார்வையாலும் கடத்த தெரிந்தவர் சினேகா அம்மா.
கதையை சுருக்கமாக சொல்லனும்னா அப்பாவை கொன்னவன் இவன்தான்னு அம்மா அடையாளம் காட்டிய பின்னர் அவனை பழி தீர்த்துக் கொள்கிற மகன். திருட்டுத் தொழில் செய்தவர் என்றாலும் பின்னாளில் போற்றப்படவில்லையா வால்மீகி. !அந்த இன்ஸ்பிரேசனின் மகன் பட்டாஸ் ஜனித்திருக்கலாம்.
பட்டாஸ் தனுஷ் சிறப்பா,அப்பா திரவிய பெருமாள் சிறப்பா என்று கேட்டால் இரண்டு கேரக்டர்களையும் செய்திருக்கிற தனுஷ்தான் மிகவும் சிறப்பு. எந்த கேரக்டர் உயர்வு என்றால் திரவிய பெருமாளை சொல்லலாம். ஆசானின் மகன் தன்னுடன் மோதுகிற போக்கினை உடையவன் என்பது தெரிந்திருந்தும் அவனை திருத்துகிற மனப்பான்மையுடன் நடந்து கொள்வதை குருவுக்கு செய்கிற நன்றியாக எடுத்துக் கொள்ளலாம். பட்டாஸ் என்கிற சக்தியாக வருகிற தனுஷுக்கு இரண்டாவது பாதியில்தான் வாய்ப்புகள் நிறைய. வெறியுடன் நடித்திருக்கிறார். ஆக எல்லாசிறப்பும் தனுஷ் என்கிற நடிகருக்கே.!
அடிமுறை கலையின் செய்முறைகளை தனுஷ் வெளிக்காட்டிய விதமும் அதை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் படமாக்கிய முறையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. சுருக்கமாக சொல்லனும்னா படமே தனுஷ் என்கிற ஒற்றை மனிதனின் சாதனையே!
இவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டியவர் இயக்குநர் .
இருந்திருக்கிறாரா? ஏமாற்றிவிட்டார்.பல படங்களின் நினைவு வருவதுதான் மிச்சம். இந்த மாதிரியான பழி வாங்கும் கதைகளை சிங்காரவேலனில் கமல் கிண்டலடித்திருப்பார்.
ஆசான் முத்தையாவாக வருகிற நாசர் சரியான தேர்வு. மகனுக்கு அடிமுறை வரவில்லையே என்கிற ஆதங்கம் அப்பாக்களுக்கே உரியது. சரியாக வராததை தன் மீது திணிக்கிறாரே அப்பா என ஆத்திரமடைவது மகன்களுக்கே உரியது. நாசரும் நவீன் சந்திராவும் அவரவர் கேரக்டர்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
மெஹ்ரின் பிர்ஜாடா .கலர் .தமன்னா நிறம். வேறன்ன வேண்டும். தமிழ்ச்சினிமாவில் கதாநாயகியின் இலக்கணமே முக்கியமான செட் பிராப்பர்ட்டி என்பதுதான் .!விசை கொடுத்தால் இயங்கும் பொம்மைகள்.
வில்லனாக வருகிற நவீன் சந்திராவுக்கு நல்ல வாய்ப்பு.
பாடல்கள் கேட்க கேட்க மனதில் அமரும் விதத்தில் மெட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஏன் வருகிறது என்கிற உறுத்தல் இல்லாமல் ரசிக்க முடிந்தது.