தயாரிப்பு : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே.கணேஷ் ,கதை, இயக்கம் : ரத்னா சிவா ,இசை :டி .இமான் , ஒளிப்பதிவு :பிரசன்னா எஸ்.குமார் ,பாடல்கள் :விவேகா,பார்வதி
ஜீவா ,ரியாசுமன் , சதீஷ் ,நவ்தீப் ,வருண் ,ஆர் என் ஆர் மனோகர் ,காயத்ரி .
************
தியேட்டரை விட்டு வெளியே வந்து வெகுநேரமாகியும் நெஞ்சில் ஒட்டிய “செவ்வந்தியே ” பாடல் அகலுவதாக இல்லை. இமானின் மெல்லிசைப்பாடல்களில் இதுவும் இணைந்து கொள்கிறது.அதிலும் பார்வையற்ற ஒரு இளைஞர் பாடியிருக்கிறார் என்பது கூடுதல் பலம். இமானின் தேடல் மற்ற முன்னணி இசை அமைப்பாளர்களுக்கு நல்வழிகாட்டி. வாழ்த்துவோம்.!
இனி கதைக்குள் செல்லலாம்.
படத்தின் வலுவே ஜீவாவும் ,மல்லியாக வருகிற வருணும்தான். இவர்கள் இருவருக்குமிடையேயான மோதல் நவ்தீப் பக்கமாக சென்றதும் பிற்பாதி திரைக் கதையில் சற்று சறுக்கல்.இயக்குநர் ரத்னசிவாவுக்கு கமர்ஷியல் ஆக்சன் மசாலா கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம்.
மயிலாடுதுறையில் கேபிள் டிவி வைத்து நடத்துகிற ஜீவா இவரது நண்பர் சதீஷ் இருவரும் லோக்கல் எம்.எல்.ஏ.வான ஆர்.என் ஆர் மனோகரின் அடாவடித்தனங்களை வெளியிட சிக்கல் முற்றுகிறது. ஜீவாவை போட்டுத்தள்ள கூலிப்படை வருணை வரவழைக்க அவர் ஜீவாவின் தங்கையை காப்பாற்றுகிறார். நன்றி தெரிவிக்க சென்னைக்கு செல்கிற ஜீவா அங்கு வருணை காப்பாற்ற வேண்டிய நிலைமை உருவாகிறது. இதன் பிறகுதான் முக்கிய வில்லனான வக்கீல் நவ்தீப்பை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அது எத்தகைய ஜீவ -மரண போராட்டத்தை உருவாக்குகிறது என்பதுதான் மீதிக் கதை.
ஜீவாவுக்கு வசதியான கிரவுண்டு. ஆக்சன் ,சென்டிமென்டு ,காதல் என கலந்து கட்டி விளையாடுகிறார்.”எனக்கே சென்னை லாங்குவேஜா ?” என கலாய்க்கிற இவர் கோவிலில் “இவனுங்களை அடிச்சா மழை வராதா, மரங்களை வெட்டுனாத்தான்யா மழை வராது”என்று குருக்களுக்கு செம நக்கல் விடுகிறார். தங்கை காயத்ரியை பாப்பா பாப்பா என்று அழைப்பதில் ரத்தபாசம் தெரிகிறது. டெலிபோன் பூத் காட்சி ஒன்று போதும் ஆக்சன் பிளாக்கில் எவ்வளவு வெறித்தனம் இருக்கிறது என்பதற்கு.!எலும்புகள் நொறுங்குகிறது.
மல்லியாக வருகிற வருணுக்கு கவுதமின் பின்னணி குரல் செம மிரட்டலாக பொருந்துகிறது. வருணின் ஆவேசத்துக்கு அந்த குரல் எடுப்பாக இருக்கிறது. இதுவரை வந்த படங்களில் வருண் எப்படியோ இருந்திருக்கலாம் ஆனால் இந்த படம் அவருக்கு புதிய தளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.கல்விக்குடும்பத்திலிருந்து ஒரு திரைக் கலைஞன்.
தங்கை இலக்கியாவாக காயத்ரிக்கு வெயிட்டான கேரக்டர். பிரசவவலியினால் துடிக்கிறபோது அண்ணன் வெளியே போய்விட்டானே என்கிற ஆதங்கம் ,கோபம் ,ஆனாலும் அதை வெளிப்படுத்த முடியாதபடி வலி,பிட் ஸ் வந்து விடக்கூடாது என்கிற பயம் இவை அத்தனையும் மொத்தமாக கலந்து காட்டுகிற முகம் –சூப்பர்.!
எம்.எல்.ஏ. ,பணக்கார தாதா இந்த மாதிரி கேரக்டர்களுக்கென நேர்ந்து விடப்பட்டவர் ஆர்.என்.ஆர்.மனோகர். பொருந்திப் போகிறார்.
சதீஷ் துணை மாப்பிள்ளை மாதிரி.! கேரக்டரின் நண்பனாக வந்து போகிறார்.
சமூகவிரோதிகளுக்கு ஆதரவாக சில போலீஸ் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த படத்திலும் இருக்கிறார்கள்.
“வா வாசுகி ” என்கிறபாடலை விட “செவ்வந்தியே ” என்கிற பாடல்தான் அகம்,செவி இரண்டிலும் தங்குகிறது. இமானுக்கு மறுபடியும் வாழ்த்துகள்.
சீறு- பார்க்கலாம்.