எதிர்பார்ப்புகள் .எதிர்ப்புகள் இரண்டும் கலந்த கலவையுடன் 28 ஆம் தேதி நள்ளிரவு தொட்டது.
ஒரு தமிழ்ப்படம் அறிமுகமாகிறது.
அவனும் அவளும் தழுவுகிற நேரம் மறந்து அமேசான் ப்ரைம் டைம் வீடியோவை திறக்கிறார்கள் .தோள் உரசியபடியே அவளது மலர்க்கூந்தல் மணமும் சேர்ந்து கொள்ள ஏசியின் மெல்லிய குளிரில் இருவரது கன்னங்களும் ஒட்டிக்கிடக்கின்றன.
“சற்றே விலகேன்..படம் பாக்கிற மூடு போய்டும்.” என அவன் கன்னம் விலகி சிரிக்கிறான்.அவளும்தான்.! ‘பொன்மகள் வந்தாள் ‘ அறிமுகம் .! ,
அமேசான் ‘பிரைம் வீடியோ’ தளத்தின்வழியாக உலகத் தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மென்ட்’ நிறுவனம்.
அறிமுக இயக்குனர் ஜே.ஜே.ஃபிரெட்ரிக் இயக்கியுள்ள படத்தில் ஜோதிகாவுடன் பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், வினோதினி வையநாதன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் .இவர்களுக்கு இந்த ஓடிடி தளம் புதுசு.
‘பொன்மகள் வந்தாள்’ எப்படியிருக்கிறாள் ?
மொத்த ஊட்டியையும் ரத்தத்தில் உறையவைக்கும் சம்பவமாக அடுத்தடுத்து பல சிறுமிகள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். இதற்கு காரணமான வட இந்திய சைக்கோ பெண் என்கவுண்டர் செய்யப்படுகிறாள் .
‘பெட்டிசன்’ பெத்துராஜ் ( கே.பாக்யராஜ் ) அவரது மகள் வெண்பா ( ஜோதிகா ), இருவரும் உள்ளூரில் நடக்கும் சின்னச் சின்ன தவறுகளை கோர்ட் மூலமாக தட்டிக்கேட்கும் சூப்பர் ஹீரோக்கள்! இவர்கள் ‘என்கவுண்டர்’ செய்யப்பட்ட வட இந்திய சைக்கோ பெண்ணின் வழக்கை மறு ஆய்வு செய்ய மனு செய்து விசாரணைக்கு கொண்டு வருகின்றனர்.
இதனால் ஊட்டியின் மிகப்பெரும் செல்வாக்குப் படைத்த வரதராஜன் ( தியாகராஜன் ) வழக்கினுள் கொண்டுவரப்படுகிறார். அதற்கு பிறகு பலப்பல யூகிக்க முடியாத சில திகிலும், திருப்பங்களும் க்ளைமாக்ஸ் வரை தொடர்கிறது. திரைக்கதைக்கு சபாஷ்!
பார்த்திபனுக்கும், ஜோதிகாவிற்கும் இடையே நடைபெறும் வழக்காடும் வாதம் எல்லாப்படங்களிலும் இருப்பதைப்போல் ஆக்ரோஷமாக இருக்காது! ஆனால் சிறிது நகம் கடிக்க வைக்கும்.. ஒரு பதட்டத்தை ஏற்படுத்தும். நடிகர், நடிகைகளின் மிகச்சரியான தேர்வும், தேவையின்றி திணிக்கப்படாத அழுத்தமான வசனங்களும் படத்தின் வெற்றி.”நம்முடைய பலம் என்னன்னு தெரிஞ்சிரவே கூடாதுப்பா”என்று பாக்யராஜிடம் ஜோ சொல்கிறபோதே மிகப்பெரிய சஸ்பென்ஸ் நமக்கு தெரியாமல் கூடவே டிராவல் பண்ணுகிறது என்பது புரிந்து விடுகிறது.
அதை படத்தின் எடிட்டர் கடைசி வரை உயிரோட்டமுடன் கொண்டு செல்ல வெட்டி ஒட்டி உதவியிருக்கிறார்
ஆர்ப்பாட்டமில்லாத அழுத்தமான நடிப்பில் அசத்துகிறார் ஜோதிகா. வெற்றியிலேயே மிதந்த ஒரு திமிர்ப்பிடித்த பப்ளிக் ப்ராஸிக்யூட்டராக ரா.பார்த்திபன் அசால்ட் செய்கிறார். வரதராஜனாக வரும் தியாகராஜன் ஸ்டைல், நடை, பேச்சு எல்லாமே டெரர்!
இப்படி படத்தில் நடித்த கே.பாக்யராஜ், பிரதாப் போத்தன், சுப்பு பஞ்சு மற்றும் வினோதினி வைத்யநாதன் என அனைவரும் கச்சிதமாக கதைக்கு பொருந்தி இருக்கிறார்கள்.
ராம்ஜியின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்தின் தரத்தினை மேம்படுத்துகிறது.
சில இடங்களில் அமெச்சூரிசம் ஃபீல் இருந்தாலும் இயக்கத்தெரிந்த இயக்குநர்களின் வரிசையில் இடம்பிடிக்க ஜே.ஜே..ஃபிரெட்ரிக் இன்னும் கற்க வேண்டும்..
தனது ‘2டி எண்டெர்டெயின்மென்ட்’ நிறுவனத் தயாரிப்பில் வெளியாகும் படங்களின்வழியாக சமூகத்திற்கு விழிப்புணர்வும், கடுமையான சட்டங்களும் தேவை என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறவர் சூர்யா. இந்தப் படத்திலும் அதை வலியுறுத்தி இருக்கிறார் .
“படம் எப்படிம்மா?”
“வாய்யா ,நம்ம படத்தையும் பார்த்துடலாம். நாம்ம ஆல்ரெடி லேட்”