ஜெயம் ரவி ,நிதி அகர்வால் ,ரோனித் ராய் ,சரண்யா பொன்வண்ணன் ,சதீஷ் ,
எழுத்து இயக்கம் : லட்சுமன் .இசை: இமான்
*************
கார்ப்பரேட்டுகளின் எடுபிடியாக அரசியல்வாதிகள் ,அரசுகள் இருக்கிறவரை விவசாயிகள் நிம்மதியாக வாழ முடியாது. விவசாயமும் செழிப்புடன் இருக்காது என்பதை சொல்கிற கதைதான் ‘பூமி’ .உலகத்தை தங்களின் கைகளுக்குள் வைத்திருக்கிற 13 பொருளாதார சுரண்டிகள் என்கிற இல்லுமினாட்டிகளின் அராஜகத்தை சொல்லவேண்டும் என்கிற ஆர்வத்துடன் இயக்குனர் லட்சுமன் கதையை அமைத்திருக்கிறார்.
இனி விமர்சனத்துக்குள் செல்லலாம்
நாயகன் ஜெயம் ரவியின் பெயரும் பூமிநாதன் என்பதால் டைட்டிலுக்கு நியாயம் தேடிவிட்ட திருப்தி.
ஜெயம் ரவி ,நாசா விஞ்ஞானி.செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சியாளர்.
இவர் சொந்த ஊருக்கு திரும்புகிற போது அங்கு நிலங்கள் சுரண்டப்பட்டு நீர் வளம் இல்லாமல் கிடப்பதையும், விவசாயிகள் வேறு திசை நோக்கி செல்கிற ஆபத்தையும் அறிகிறார்.
விவசாயம் செத்துப்போனால் நாடு சுடுகாடாகிவிடும் என்பதால் விவசாயிகளை காப்பாற்றுவதற்காக பலவிதமான போராட்டங்களில் இறங்குகிறார்.
அதில் வென்றாரா?
கதாநாயகன்தான் வெற்றி பெற வேண்டும் என்பதால் அதற்கேற்ப காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் இயல்புடன் திரைக்கதை இல்லை என்பது மிகப்பெரிய குறை.
குறிப்பாக நாயகனோ ,வில்லனோ தங்களது திட்டங்களை முன்னதாகவே எதிரிக்கு சொல்வார்களா?
நிலத்தடி நீர் 800 அடிக்குப் போன பின்னர் ஜெயம் ரவிக்கு மட்டும் சுலபமாக தண்ணீர் கிடைப்பது எப்படி?
ஒரு வெளிநாட்டு கார்ப்பரேட் கொடியவன் நினைத்தவுடன் ஹெலிகாப்டரில் வந்து நடுரோட்டில் இறங்கி நாயகனை கட்டிவைத்து மிரட்டுவதெல்லாம் நடக்கக்கூடியதா?
ஜெயம் ரவி சிறப்பாக நடித்திருக்கிறார்.இவரும் ,வில்லன் ரோநித் ராயும்தான் வலிமையுடன் தேரை இழுத்து செல்லவேண்டிய கட்டாயம்.
ஆனால் தேர் நிலை வந்து சேரவில்லை என்பது கவலைக்குரியது.
நாயகி நிதி அகர்வால் எதற்காக வருகிறார் ,போகிறார் ? எந்த பயனும் இல்லை அவரால்.!
இந்த பட்டியலில் சரண்யா பொன்வண்ணன்,சதீஷ் ஆகியோரும் இணைந்து கொள்கிறார்கள்.
விவசாயிகள் கடுமையாக தலைநகரில் போராடி வருகிற புரட்சிகரமான காலத்தில் இந்த படம் ஆறுதலாக அமையவேண்டிய வாய்ப்பினை இழந்து விட்டது.
வேறென்ன சொல்ல?