கால் டாக்சி டிரைவர்கள் காணாமல் போகும் செய்திகளை அடிக்கடி படித்திருக்கிறோம். அதை வைத்து உண்மையும் கற்பனையும் கலந்து செய்யப்பட்ட கதையை திரையில் கொடுத்திருக்கிறார்கள்.
டிரைவர்களை கொலை செய்து விட்டு கால் டாக்சிகளை வாங்கி விற்பனை செய்கிற ஒரு கும்பலை எப்படி டிரைவர்களே கண்டு பிடிக்கிறார்கள் என்பதை காதலை கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
கால்டாக்ஸி டிரைவராக நடித்திருக்கும் சந்தோஷ் சரவணன் வேடம் தன்னம்பிக்கையூட்டும்படி அமைந்திருக்கிறது. அவரும் வேடத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
நாயகி அஸ்வினி சந்திரசேகர் . வழக்குரைஞராக இருந்தபோதும் நாயகனின் நற்குணங்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்ளும் வேடம். நிறைவாகச் செய்திருக்கிறார். ஒரு முக்கியமான நேரத்தில் காதலன் தவிர்க்கிறார் எனும்போது காதல்தவிப்பை நடிப்பில் வெளிப்படுத்துகிறார்.
மொட்டை ராசேந்திரன், போராளி திலீபன் உள்ளிட்டோரும், காவல்துறையினராக நடித்திருக்கும் சேரன்ராஜ், இயக்குநர் ஈ.ராமதாஸ்,உள்ளிட்டோரும் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள். கொலைகாரக்கூட்டத்தை சேர்ந்த நிமல் கவனிக்க வைக்கிறார்.
எம்.ஏ.ராஜதுரையின் ஒளிப்பதிவு அளவு. பாடல்காட்சிகளைப் படம்பிடித்ததில் அவருடைய ரசனை இளைஞர்களைக் கவரும்.
இசையமைத்து பாடல்களை எழுதியிருக்கிறார் பாணர். கதைக்குள் உழைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு செய்திருக்கும் டேவிட் விஜய், படத்தை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன்.