மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஊழியர்களைக் கசக்கிப் பிழியும் நிறுவனங்களின் நடவடிக்கைகளையும், டார்கெட் என்ற பெயரில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் ஒரு கலகலப்பான கடத்தல் சம்பவத்துடன் சொல்ல முயன்றிருக்கிறது ‘கோல்ட் கால்’, திரைப்படம்.
பெங்களூரில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில், மார்க்கெட்டிங் பிரிவில் வேலைக்காகச் சேருகிறார்கள் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ் மற்றும் கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு இளைஞர்கள். வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்தாலும், தங்களது வேலையைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் இவர்கள் நால்வரும் மிக நெருங்கிய நண்பர்களாக மாறுகிறார்கள். கம்பெனி விதிக்கும் விற்பனை இலக்கினை எட்ட முடியாமல் தவிக்கும் இவர்களுக்கு, வேலை பறிபோகும் ஆபத்து உருவாகிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, நிறுவனத்தின் விதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரே பகுதியில் இந்த நான்கு நண்பர்களும் ஒன்றாக இணைந்து கூட்டு முயற்சியில் ஆர்டர்களை பெறுகிறார்கள்.
இப்படித் அவர்கள் தங்களது டார்கெட்டிறகாக போராடிக் கொண்டிருக்கும் போது, அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு தொழிலதிபரின் மகன் மர்மமான முறையில் கடத்தப்படுகிறான். இந்தத் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இந்த நான்கு மார்க்கெட்டிங் இளைஞர்கள்தான் இருக்கிறார்கள் என்று காவல் துறை அறிவித்து, அவர்களைக் குற்றவாளிகளாகத் தேடத் தொடங்குகிறது. இவர்களது கம்பெனி மேலாளரும் இந்த வழக்கில் அதிரடியாகக் கைது செய்யப்படுகிறார். சிறுவன் ஏன் கடத்தப்பட்டான், அதன் பின்னணியில் இருக்கும் நபர் யார், எதற்காக இந்தக் கடத்தல் என்பதை கலகலப்பான நகைச்சுவைப் பாணியில் விவரிக்கிறது இத்திரைப்படம்.

முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ் மற்றும் கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு கதாநாயகர்களும் தங்களது கதாபாத்திரங்களின் தன்மைகளை உணர்ந்து மிகவும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு இணையாகப் பெண் முதன்மைக் கதாபாத்திரங்களில் தோன்றியுள்ள அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேலி லிட்டி மற்றும் கீர்த்தனா புல்கி ஆகிய நால்வரும் தங்களது பங்களிப்பை நன்றாகவே அளித்துள்ளனர். இவர்களுடன் நிறுவனத்தின் மேலாளர், விற்பனையாளர்களுக்கான பயிற்சியாளர் எனப் படத்தில் வரும் மற்ற துணை கதாபாத்திரங்களும் தங்களது பாத்திரத் தேர்வுக்குப் பொருத்தமாக அமைந்து தங்களின் பணிகளைச் செய்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக, சரவணனின் ஒளிப்பதிவும், பிரணவ் கிரிதரனின் பாடல்களும் பின்னணி இசையும் எந்தவொரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் மிகவும் சுமாராகவே அமைந்துள்ளன.
கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் தம்பிதுரை, மார்க்கெட்டிங் ஊழியர்களின் அன்றாடப் பணிச் சவால்களுக்கு நடுவே, கிளாமரையும் எதார்த்தமான நகைச்சுவையையும் கலந்து ஒரு சுவாரசியமான கமர்ஷியல் திரைப்படமாக நகர்த்த முயற்சித்திருக்கிறார். ஆனால், அது முடியவில்லை.
குறைவான பட்ஜெட்டில், மார்க்கெட்டிங் பிரிவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் செய்யும் சில தில்லுமுல்லுகளையும், ஏமாற்று வேலைகளையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கும் விதம் ரசிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. மற்றபடி, திரைக்கதையின் பலவீனமான ஓட்டத்தால் இது ஒரு சுமாரான படமாகவே இருக்கிறது.












