லண்டன் கார்ப்பரேட் சூழலையும் தமிழ்நாட்டுக் கிராமத்துப் பின்னணியையும் இணைத்து, ஒரு காதல் மற்றும் குடும்பத் திரைப்படமாகத் திரைக்கு வந்திருக்கிறது ‘சண்டக்காரி’. பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, லண்டனில் உள்ள ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிகாரியாகத் தனித்து வாழ்கிறார் ஸ்ரேயா. அதே நிறுவனத்தில் அடுத்த கட்ட உயரிய பதவியை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அவர், தனது சக பணியாளர்களிடம் மிகவும் கடுமையான போக்கைக் கடைப்பிடிப்பவராக வலம் வருகிறார். இப்படிப்பட்ட ஒரு சூழலில், தமிழ்நாட்டின் பெரும் செல்வாக்குமிக்க பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த விமல், அந்த நிறுவனத்தில் ஸ்ரேயாவின் தனிப்பட்ட உதவியாளராகப் பணியில் இணைகிறார். பெரிய வசதிகள் இருந்தும் சொந்தமாக ஒரு புதிய செயலியை உருவாக்கித் தன் சொந்தக் காலில் நிற்கத் துடிக்கும் விமலுக்கும், ஸ்ரேயாவிற்கும் இடையே அலுவலகத்தில் தொடர்ச்சியான மோதல்களும் ஈகோ சண்டைகளும் ஏற்படுகின்றன.
ஸ்ரேயா ஆசைப்பட்ட அந்த உயரிய கார்ப்பரேட் பதவி அவரைத் தேடி வரும் அதே வேளையில், அவரது விசா காலம் முடிவடைவது அவருக்குப் பெரிய பின்னடைவாக மாறுகிறது. தற்காலிகமாகத் தனது விசா காலாவதியானதால், அந்தப் பெரிய பதவியை இழக்க விரும்பாத ஸ்ரேயா, அங்கு நிரந்தர குடியுரிமை விசா வைத்திருக்கும் விமலின் மூலம் அதனைச் சாதிக்கத் திட்டமிடுகிறார். விமலுடன் ஒரு போலித் திருமண ஒப்பந்தத்தைப் போட்டு அதன் மூலம் நிரந்தர விசா பெற்றுவிடலாம் என நினைக்கும் ஸ்ரேயாவின் திடீர் திருமண ஏற்பாடுகளைப் பார்த்து லண்டன் விசா அதிகாரிக்குக் கடுமையான சந்தேகம் எழுகிறது. விசா அதிகாரியின் அந்தச் சந்தேகத்தைத் தீர்க்க இருவரும் இந்தியாவிலுள்ள விமலின் கிராமத்து வீட்டிற்கு ஒன்றாகப் பயணிக்கிறார்கள். அரசாங்கத்தின் சட்ட விதிகளையும், விசா அதிகாரியின் கண்களையும் ஏமாற்றி ஸ்ரேயா நினைத்த கார்ப்பரேட் பதவியை அடைந்தாரா, இல்லையா? விமல் என்ன செய்தார் என்பதே இத்திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விமல், நடிப்பில் தனது வழக்கமான முந்தைய பாணிகளிலேயே வலம் வருவதால், திரைக்கதையில் எந்தவொரு பெரிய தாக்கத்தையும் அல்லது புதுமையையும் ஏற்படுத்தத் தவறிவிடுகிறார். மறுபுறம், கார்ப்பரேட் திமிரும் அகந்தையும் பிடித்த பெண் கதாபாத்திரத்திற்கு ஸ்ரேயா சரண் மிகவும் கச்சிதமாகப் பொருந்துவதுடன், காட்சிகளில் அவ்வப்போது தனது கவர்ச்சியையும் தாராளமாகக் காட்டியுள்ளார். இவர்களுடன் விமலின் தந்தையாக வரும் பிரபு, தாயாக வரும் உமா பத்மநாபன், ஸ்ரேயாவின் தோழியாக நடித்துள்ள புன்னகை பூ கீதா மற்றும் சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, தேவ் கில், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் உள்ளிட்டோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவின் கேமரா காட்சிகளில் நாம் பார்ப்பது நிஜ லண்டன் தானா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட லண்டன் போன்ற இடமா என்ற சந்தேகம் எழுகிறது. பல முக்கியக் காட்சிகளில் பின்புலத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் (Green Mat) வேலைப்பாடுகள் அப்பட்டமாகத் தெரிகிறது.
அம்ரிஷின் இசையமைப்பில் வந்துள்ள பாடல்களும், பின்னணி இசையும் கதையின் ஓட்டத்திற்குப் பெரிய அளவில் உதவாமல், ஒரு சராசரி ரகத்திலேயே கடந்து போகின்றன. பெற்றோரின் பாசமும் அரவணைப்பும் கிடைக்காமல், எப்பொழுதும் கோபத்தின் உச்சியில் இருக்கும் ஒரு கடினமான பெண்ணின் மனதிற்குள் மெல்ல மெல்லத் தோன்றும் காதலையும், எதார்த்தமான அன்பையும் ஒரு அழகான கவிதையாகத் திரையில் கொண்டுவரப் பெரிதும் முயற்சித்திருக்கிறார் கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஆர்.மாதேஷ். பலவீனமான திரைக்கதை மற்றும் சுவாரசியமற்ற காட்சியமைப்புகள் ஏமாற்றம் அளிக்கிறது.
‘சண்டக்காரி’ – வசீகரிக்கவில்லை!












