
பொடியன்குளம் கிராமம்.
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கிற எளிய கிராமம். கட்டுப்பாடுடன் வாழ்கிற மக்கள். தங்களுக்குள்ளும் மாற்றம் நடக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள்.அதை அவர்களின் பெயர்கள் வழியாக அறியலாம் .தனுஷின் பெயர் கர்ணன்.இவரது காதலியின் பெயர் திரவுபதை .இன்னும் சிலர் துரியோதனன் ,என்று கூட வைத்திருக்கிறார்கள். இந்த கதையில் இருக்கிற முக்கிய குறியீடுகளில் இதுவும் ஒன்று.இந்த பெயர் மாற்றத்தைக் கூட சிலர் விரும்பவில்லையென்பதை எள்ளலாக உணர்த்துகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ் .யானை யாருடைய வாகனம்? தேவேந்திரனின் வாகனம். படத்தின் முக்கிய குறியீடு.
“அப்பன் பே ரு மாடசாமி ,மகன் பேரு கர்ணன், ஏண்டா உன் பேரு துரியோதனன்னா அவன் பேர் அர்ஜுனனா?” என்று போலீஸ் அதிகாரி நக்கலாக கேட்கிறபோது இதை கூட சகித்துக்கொள்ள முடியவில்லையா என்கிற எண்ணம் வராமல் இல்லை.?
சரி கதைக்கு வரலாம்.
பொடியன்குளம் கிராமத்துக்கு பஸ் வசதி கிடையாது. மெயின் ரோட்டுக்கு நடந்து சென்று கிடைக்கிற பஸ்களில் ஏறி செல்லலாம். ஆனால் அவ்வழியாக செல்கிற பஸ் டிரைவர்கள் நிறுத்துவதில்லை. ஒருநாள் கடுப்பாகிப்போன கர்ப்பிணி பெண்ணின் மகன் கல்லை எறிந்து விட கலவரம் ஆகி விடுகிறது.
எப்படா வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த போலீஸ் அதிகாரி நட்டிக்கு அருமையான வாய்ப்பாக அமைகிறது. கர்ணன் (தனுஷ் )உள்ளிட்ட முக்கிய புள்ளிகளை வேட்டையாட பொடியன்குளத்தை அடுகளமாக்கி விடுகிறார்.ஆண் ,பெண்,முதியவர் ,சிறார் என பார்க்காமல் நொறுக்கித் தள்ளுகிறார். அந்த கிராமம் சர்வநாசமாகிறது!
இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.
கர்ணன் தனுசுக்கு சிறப்பு காஸ்டியூம் என்று எதுவும் கிடையாது. லுங்கி,சட்டை அவ்வளவுதான். ஒடுக்கப்பட்ட தன்னுடைய மக்களுக்காக வாழ வேண்டும் என்கிற மெனக்கெடல் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
காதலியின் பேரன்பு ,பெரியவர் லாலின் மீதான அளப்பரிய அன்பு ,அவரை இழந்துவிட்டு துடிக்கிற துடிப்பு ,மக்கள் மீதான பாசம் எல்லாமே அளவான இயல்பான நடிப்பு.
வில்லனாகவே பார்த்து பழகிவிட்ட நமக்கு லால் இந்த கதையின் வித்தியாசமான மனிதர். மண்ணின் மைந்தராகவே மாறி இருக்கிறார். அந்த நடிகருக்கு உரிய சிறப்புகள் மாநிலம் கடந்து வந்து சேரும். கிழவியின் முந்தானை முடிச்சை அவிழ்க்கிறபோது நிகழ்கிற உரையாடலில் இருக்கிற காதலும் ,குத்தலும்.! அடடே..!உயர்வு.
அடுத்து உயர்ந்த மதிப்பெண் போலீஸ் உயரதிகாரி நட்டி நடராஜ். எத்தனையோ முரட்டு அதிகாரிகளை உள்ளடக்கி வைத்துக்கொண்டிருக்கிறார். ஒடுக்கப்பட்டவன் தன் தோள் தொட்டு பேசுவதை இழிவாக கருதுகிற திமிர் ,அதிகார ஆணவம் ,அகம்பாவம் எல்லாம் அந்த ஒடிசலான உடம்பில்.!
இயக்குநர் மாரி செல்வராஜின் படங்களில் பல குறியீடுகள் இருக்கும். தலை இல்லாத புத்தர் சிலை ,முன்னங்கால்கள் கட்டப்பட்ட கழுதை ,தலையற்ற சுவரோவியம் ,பஸ் கலவரம் இவையெல்லாம் என்ன சொல்கின்றன.? எத்தனையோ நிகழ்வுகளை உள்ளடக்கிய உண்மையின் சுமைதாங்கி அல்லவா!
படத்தில் இடம் பெற்றிருப்பது எந்த கிராமம் என்று கேட்கிற அளவுக்கு செட்டு போட்டிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம். படத்தின் சிறப்புகளில் சமஅளவில் பங்கு போட்டுக்கொள்கிறார்கள் கேமரா தேனீ ஈஸ்வரும் ,இசைஇ அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் !”கண்டா வரச்சொல்லுங்க.! “அசல் பதநீர் !
“மைண்ட்லெஸ் வயலன்ஸ்” என்று முன்னாள் டிஜிபி .வைகுந்த் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய குறிப்பில் குறிப்பிட்டிருந்ததின் விளக்கக் காட்சிகள்தான் கர்ணன் படத்தின் இடைவேளைக்குப் பின்னர் திரையில் ஓடுகிறதோ?
விளக்கம் தேவைப்பட்டால் 1995 ,ஆகஸ்ட் 31-ல் நெல்லை மாவட்டம் கொடியங்குளம் போலீஸ் அராஜகம் பற்றி அன்றைய டிஜிபி வைகுந்த் எழுதிய குறிப்பினை பார்க்க.
கர்ணன் -மாவீரன் .












