படம் பார்க்கிறபோதே கனத்த மனமும் ,நீர் வழிந்த கண்களுமாக ஜெய் பீமை கடக்கிறோம் .
அடிக்கடி சினம் பொங்குகிறது.. எரிமலையின் மீது இருக்கைகளை பொருத்திவிட்டார்களோ என்கிற அளவுக்கு உடல் வெப்பமேறுகிறது ,அந்த குளிரூட்டப்பட்ட அரங்கில் !
விடுதலை பெற்று பொன்விழாவினை கடந்தும் ,இன்னும் புழுக்களாகத்தான் மக்கள் வாழ்கிறார்களா?
“ஆமாம் ,வாழ்கிறார்கள் ” என்பதை நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்டு இயக்கியிருக்கிறார் த .செ .ஞானவேல். முதலில் வழிபடு விநாயகரை வணங்கிவிட்டு உள்ளே நுழைவதைப்போல, இயக்குநருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு விமர்சனத்துக்குள் நுழைவோம்.!
சிறை வாசலில் …
கணக்கு எடுப்பவரைப் போல ஒரு போலீஸ் அதிகாரி …விடுதலை பெற்று வருகிற ஒவ்வொருவரிடமும் சாதியை கேட்டுப் பிரிக்கிறார்.
எதற்காக இப்படி பிரிக்கிறார் என்றால் மறுபடியும் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறைக்குள் தள்ளுவதற்குத்தான்!ஒடுக்கப்பட்ட குறவர் ,இருளர் இன மக்கள் மீது இத்தகைய வன்முறை காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது.
நாயை அடிப்பதைப்போல அடித்து இழுத்துப்போட்டாலும் ஏனென்று கேள்வி கேட்கமுடியாத வாயற்ற ஜீவன்களாக வாழ்கிற மக்கள் மீது அதிகார வர்க்கம் செலுத்துகிற எதேச்சதிகாரம்.!
ஓப்பனிங் சீனே கதையின் அடையாளத்தை உணர்த்தி விடுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களில் நாடோடிகளாக வாழ்கிற இருளர்களுக்கு அடிப்படை உரிமை எதுவுமே இல்லை.இருப்பதற்கு வீடில்லை.இந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான வாக்குரிமை இல்லை. ரேஷன் அட்டை கிடையாது. இருளர் சாதியை சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழும் இல்லை.
அவன் இந்திய குடிமகன் இல்லை. முகமே இல்லாத அவனை ஏறி மிதித்துக் கொன்றாலும் எவனும் கேட்கப்போவதில்லை.
ராஜாக்கண்ணு ,இவரது மனைவி செங்கேனி உள்ளிட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் பிய்த்துப்போட்டு பேயாட்டம் ஆடுகிறது என்பதை ஜெய்பீம் உணர்த்துகிறது.
சூர்யாவுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டிருக்கிறது. நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் முழுத்திரைக்கதையாக மலர்ந்திருக்கிறது. நீதியரசர் சந்துருவாக சூர்யா .கருப்புக்கோட்டுக்கு கவுரவம் சேர்த்திருக்கிறார். வந்ததை வாரிச்சுருட்டி இருட்டுக்குள் திணித்துவிடுவோம் என்கிற திருட்டு மனம் இல்லாமல், வாழ வைத்த இந்த மக்களுக்கு நல்லது செய்து வருகிற சூர்யாவுக்கு கோடி கும்பிடு போட்டாலும் போதாது. துணையாக இருந்து ஊக்குவிக்கிற திருமதிஜோதிகா நல்ல மனையாள் !குடும்பம் செழித்து வளரும்.!
இருளர் இன மக்களின் கல்விக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிற நவீன கர்ணனே …வாழ்த்துகிறது,வணங்குகிறது. சினிமா முரசம்.
கதையில் முதலிடம் செங்கேனியாக நடித்திருக்கிற லிஜோ மோல் ஜோஷ்க்கு.! அடுத்து செங்கேனியின் கணவர் மணிகண்டனுக்கு.! லிஜோவை தேசிய அளவுக்கு உயர்த்தப்போகிறது ஜெய் பீம்.!
இருவருமே வாழ்ந்திருக்கிறார்கள். வயல் வரப்புகளில் புகை போட்டு பிடித்து வேட்டையாடுகிற முதல் காட்சியிலேயே அவர்களின் பாசம் ,நேசம் மேன்மை தெரிந்து விடுகிறது.”காயம் ஆறிடும் .ஆனா திருடன்கிற அவப்பேரு சாவுற வரை துரத்திக்கிட்டே வரும் “என அடிகளை தாங்கிக்கொண்டு பேசுகிற மணிகண்டனுக்கு அந்த அடிகளும் மிதிகளுமே சாவுக்கு வழி வகுக்கிறது.!!காட்சி படுத்தல் அருமை.
பெண்ணென்றும் பாராமல் எஸ்.ஐ.தமிழ் லத்தியினால் விளாசுகிறபோது அந்த அதிகாரியின் கையைப்பிடித்து ஒடிக்கலாமா எனநமது கை பரபரக்கிறது. அடி என்றால் அடி இயக்குநர் பாலா படத்தை விட கடுமையான அடி.!எஸ்.ஐ .ஆக நடித்திருக்கிறார் தமிழ்! இவர் வெளியில் நடமாடுகிறபோது எச்சரிக்கையுடன் நடமாடுவது நல்லது. உணர்ச்சி வயப்பட்ட ரசிகர்கள் மொத்தினாலும் மொத்தி விடுவார்கள்.!!
சூர்யாவின் நடிப்பு என்பது அர்ப்பணிப்புடன் கூடியதாக இருக்கிறது. போராளியின் குணம் ,எதிராளியின் பலம் ,பலவீனம் அறிந்து வகுக்கிற வியூகம் ,மொத்த கதையின் தீர்வும் இவரிடம் இருப்பதால் அளந்து நடித்திருக்கிறார். சுவரில் பந்து வீசி பாயிண்டுகளை பிடிப்பது ஒருவித மனஇயல்புதான்!எத்தனை விருதுகளை அள்ளப்போகிறாரோ !
காக்கி சட்டைக்குள் சில நச்சரவங்கள் புகுந்து இருந்தாலும் நல்லவர்களும் அதைப் போட்டு இருக்கிறார்கள் என்பதற்கு பிரகாஷ் ராஜ் நல்ல உதாரணம். கைதட்டல்களை சில இடங்களில் பெறுகிறார்.
எத்தனையோ நீதிமன்றங்களை பல திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் ஜெய்பீமின் உயர்நீதிமன்றம் தனித்து நிற்பதற்கு காரணம் அதன் உயிரோட்டம் ,நம்பகத் தன்மை தான்! ஞானவேலுக்கு தனித்த வாழ்த்துகள்.வாய்தா வக்கீல் மாதிரி வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கரின் கேரக்டர் வெகு எதார்த்தம் .
பிற்பாதியில் வருகிற பாடல் அவசியம்தானா?ஷான் ரோல்டனின் இசை அவசியம் அறிந்து பொருந்திப் போகிறது காட்சிகளுடன்!
எஸ்.ஆர்.கதிரின் கேமரா படத்தின் புரட்சிக்குரலை பிரதிபலித்திருக்கிறது.
பீமா ஆற்றையும் கடந்து எழுச்சியுடன் முழங்குகிறது ஜெய் பீம் !