ஒத்திகையை விரும்பாத நடிகர்கள் ! கமல் கடும் தாக்கு!!

சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான  “விநோதய சித்தம்”  திரைப்படம்,  ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்தது. ZEE5 தளத்தில் உலகளவில் மிக அதிக எண்ணிக்கையிலான பார்வைகளை குவித்து, நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தில் உள்ள அனைவரும் கொண்டாடும்படியான படமாக வெற்றி பெற்றுள்ளது. பல வருடங்களுக்கு நாடக மேடையில் நடத்திய நாடகத்தை இயக்குநர் சமுத்திரகனி அதே பெயரில் திரை வடிவமாக மாற்றியிருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அந்நாடகம் மீண்டும் பல மேடைகளில் ஶ்ரீவத்சன் அவர்களின் மூலம் அரங்கேறி வருகிறது. அப்படி நேற்று ஶ்ரீவத்சன் “ விநோதய சித்தம்” நாடகம் அரங்கேறிய மேடையில் உலகநாயகன் கமலஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். 
இந்நிகழ்வில் நடிகர் கமலஹாசன் பேசியதாவது….  நான் இங்கு வந்ததற்கு மிக முக்கிய காரணம் KB  சார் தான்.அவரையும் என்னையும் தனியாக பிரிக்க முடியாது. எனக்கு கிடைக்காத பாக்கியம் திரு ஶ்ரீவத்சன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. KB சாருக்கு அவர் கதை எழுதியிருக்கிறார். அவருக்கு நிறைய கதை சொல்லியிருக்கிறேன் ஆனால் எழுதியதில்லை. ஒரு நூல் கொடுத்தால் போதும் அதை அழகான துணியாக மாற்றிவிடுவார் KB சார். இன்னொரு காரணம் நானும் PKS  நாடகக் குழுவிலிருந்து வந்தவன் ஒரு முறை பள்ளியில் மாடியில் இருந்து விழுந்து விட்டேன் அதை அப்போது, பையன் பிழைத்து கொண்டானா என PKS குழுவில் விசாரிக்க, களத்தூர் கண்ணம்மாவில் நடித்த பையன் என்று சொல்லியிருக்கிறார்கள் என்னை நாடகத்தில் நடிப்பியா எனக் கேட்டு நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார்கள். அப்படித்தான் நாடக குழுவில் இணைந்தேன்
எல்லோரும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு போவார்கள் ஆனால் நான் சினிமாவில் இருந்து நாடகத்திற்கு வந்தேன், அந்த நாடகங்கள் பேரனுபவமாக இருந்தது. மீண்டும் என்னை சினிமா நோக்கி தள்ளி விட்டது நாடகம் தான். மீண்டும் நாடக மேடைக்கு வர நிறைய ஆசைப்பட்டேன், யாரும் என்னை இணைத்து கொள்ளவில்லை. நாடக மேடை என்பது மிகச்சிறப்பானது ஶ்ரீவத்சன் எடுத்துக்கொண்ட முயற்சி மிகச்சிறப்பானது.  சினிமாவில் பாம் போடுவார்கள் பாட்டு பாடுவார்கள் போடுவார்கள், இரண்டு பேர் செய்ய வேண்டிய காதலை 50 பேர் செய்து கொண்டிருப்பார்கள் ஆனால் இங்கு தனியாக ரசிகனுக்கும் சிந்தனைக்குமான தொடர்பு இருக்கும். நான் நாடகத்தின் ரசிகன் என்பது தான் எனது முதல் தகுதி. நிஜமான திறமையை அடையாளப்படுத்துவது நாடக மேடை தான். சினிமாவில் நான் நடிக்க கூட தேவையில்லை ஹோலோகிராம் மூலம் என் போன்ற உருவத்தை கொண்டு வந்து விட முடியும் அந்தளவு டெக்னாலஜி வந்துவிட்டது ஆனால் இங்கு மேடையில் நிகழ்வது தான் நிஜமான திறமை. ஒரு தடவை பார்த்த சோ அவர்களின் நாடகம் கூட ஒவ்வொரு காட்சியும் எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது.
எனக்கு நல்ல நாடகங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும். மீண்டும் நாடகங்கள் நடிக்க ஆசை. இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கண்டிப்பாக வேறு மேடை ஏற உள்ளேன். அரசியல் மேடை இல்லை. மும்பையில் சசிகபூர் அவர்கள் பிரித்வி தியேட்டர் என ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். அது போல் ஒன்றை இங்கு அமைக்க ஆசைப்படுகிறேன். இந்த நாடகத்தை பொறுத்த வரையில் நிறைய சொல்ல வேண்டும். எனது உத்தம வில்லனில் ஒரு பாடல் வரும் சாகாவரம் போல் சோகம் உண்டோ என்ற பாடல் அந்த பாடலின் மேம்பட்ட வடிவமாகத் தான் இந்த நாடகம் உள்ளது. மரணத்துடனான அழகான உரையாடலாக இந்த நாடகம் அமைந்துள்ளது. இந்த உரையாடலை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நம் அனைவருக்குமான தேதி நிச்சயிக்கப்பட்ட தேதி. வீடு கட்டும் போது கழிவறை பற்றி சிந்திக்க மாட்டோம். வாழ்கைக்கு இருக்கும் மரியாதை மரணத்திற்கு தரப்பட வேண்டும் அதை இந்த நாடகம் செய்துள்ளது. என்னுடைய பிறந்தநாள் சிறப்பாக இதை அரங்கேற்றியதாக கூறியதற்கு நன்றி. நாம் அனைவரும் உணர வேண்டிய உண்மையை அழகாக மென்மையாக எடுத்துரைக்கிறது இந்த நாடகம். இந்த நாடகத்தை அரங்கேற்றுவதும், அதில் நான் கலந்து கொள்வதும் மகிழ்ச்சி. 
என்னைப் பொருத்தவரை இந்த நாடகத்தை என் பிறந்தநாளுக்காக போட்டதாக சொன்னார்கள். அது எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதற்கு நானும் ஒரு காரணமாக இருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஆனால் இந்த நாடகம் எனக்கு சொன்ன புத்திமதி போல் என் தந்தையாரும். சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்கிறார். என்னுடைய பிறந்த நாளும் அவருடைய இறந்த நாளும் ஒன்று தான். நிறைய  நாடகம் பாக்கணும். நிறையபேர் நாடகத்தில் நடிக்கணும். நிறைய ஒத்திகை பாக்கணும். இதில் கலந்து கொண்ட ஒருத்தர் சொன்னாரு, நான் ஒத்திகைக்கு  போகலேன்னா நாடகத்திலேயே என்னை இல்லாம பண்ணிடுவாருன்னு சொன்னாரு  பாருங்க,  அதுக்கே ஒரு சபாஷ் போடலாம். ஏன்னா, நான் வேலை பார்க்கிற இடத்துல ஒத்திகைக்கே மரியாதையே கிடையாது. சினிமா நட்சத்திரங்கள் ஒத்திகையே விரும்ப மாட்டாங்க.. அவர்களுக்கெல்லாம் அப்படியே எரிமலைகள் எல்லாம் தெறித்து விழுந்து விடும் என்ற நம்பிக்கை. ஒத்திகையை விரும்பும் ஒரு வாத்தியார் எனக்கு இருந்ததால் அந்த ஒத்திகையின் பெருமை எனக்கு தெரியும். நான்  சினிமாவுக்கு ஒத்திகை பார்ப்பேன் நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கும் அளவுக்கு பார்ப்பேன். ஒத்திகை நாம் அந்த படைப்புக்கு தரும் மரியாதை. 
நான் இயக்கும் படத்தை எத்தனை முறை பார்ப்பீர்கள் என்று கேட்டாரள் ஒரு முறை நிஜத்தில் எண்ணிப் பார்த்தேன் நிஜமாகவே 100, 150 முறை பார்ப்பேன், டப்பிங், ரெக்கார்டிங் என மீண்டும் மீண்டும் புசித்து, சாப்பிட்டுவிட்டு தான் உங்களுக்கு தருவேன். நீங்கள் வெற்றி பெற வைப்பதற்கு பார்ப்பதை விட அதிக முறை நான் பார்ப்பேன். இங்கு இந்த நாடகத்தில் விமர்சனம் என்பதே இல்லை, அத்தனை பேரும் அருமையாக செய்துள்ளார்கள். நடித்தவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் இணையத்தில் பார்க்க முடிகிற காலத்தில் இங்கு நேரில் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.