ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, ( அது அபி சரவணன் தானுங்கோ !) இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார்
பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பலர் நடிக்க ,நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை கவனித்துள்ளனர்.
படம் திரையிடப்படுவதற்கு முன்னர் இயக்குனர் ஆண்டனி சாமி தனது கவலையை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
“நூறு முறை இந்த படத்தை கைவிட்டு விடலாம் என நினைத்து, ஆனால் திரும்பத்திரும்ப ஆரம்பித்து, இப்போது இந்த படத்தை ரிலீஸ் வரை கொண்டு வந்து விட்டோம். இந்த படத்திற்கான பிரச்சனைகளை சமாளிப்பதில் எங்களுக்கு சிரமம் ஏற்படவில்லை.. ஆனால் எதிர்ப்புகளை அதிகம் சந்தித்து விட்டோம்.. இப்படியெல்லாம் கூட எதிர்ப்பு வருமா எனும் விதமாக எதிர்பாராத திசையிலிருந்து எல்லாம் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.
குறிப்பாக இந்த படத்தை தென் மாவட்டங்களில் திரையிட வேண்டாம் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தென் மாவட்டத்தில் நடக்கும் கதைக்களம் என்பதால் தென் மாவட்ட தலைவர்களில் ஒருவரான பசுபதி பாண்டியனின் புகைப்படம் சில காட்சிகளில் பின்னணியில் இடம்பெறுவது போல செய்திருந்தோம்.ஆனால் அதற்கும் சென்சார் தடை.
இந்த படத்தில் நாங்கள் பயன்படுத்தி இருந்த தலைவர்களின் புகைப்படங்களை எல்லாம் உருவம் தெரியாதவாறு மறைக்கும்படி கூறினார்கள். கதைக்கும் காட்சிக்கும் தேவைப்பட்டது என்பதாலேயே அவர்களது படங்களை இடம்பெறச் செய்தோம்..
ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதால் வேறுவழியின்றி சென்சார் அதிகாரிகள் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டியதாகிவிட்டது. இந்த படத்தை பார்த்துவிட்டு, எதற்காக அந்த தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றன, குறிப்பிட்ட வசனங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை ஊடகங்கள் மூலமாக வெளியே தெரிந்தால் நன்றாக இருக்கும்” என்று வேண்டுகோள் வைத்தார்.
அவரது கவலையின் ஆழம் தெரிந்தது. பணம் போட்டவர்களுக்குத்தானே வலி இருக்கும்.
சரி படம் எப்படி?
குறைந்த பட்ஜெட் படம் என்பது தெரியாத அளவுக்கு ஒளிப்பதிவு இருந்தது.கதையின் நேட்டிவிட்டி குறையாத அளவுக்கு இடங்களையும் தேர்வு செய்து படம் பிடித்திருக்கிறார்கள். நீண்ட வருடங்கள் தமிழில் தலை காட்டாத சீதாவை புஷ்டியுடன் காட்டினார்கள்.அர்த்தமுள்ள பிரவேசம்.! ஏழு ஆண்டு கால உழைப்பு நடிகர்களை பார்த்தால் தெரிந்து விடும்.!
கதை என்ன?
தொடக்கத்தில் மாணவர்களை சாதி அரசியல் எந்த அளவுக்கு இழுத்திருக்கிறது என்பதை மேலோட்டமாகவே காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆண்டனி சாமி.!இரண்டு சாதிகள் இருக்கிற ஒரு பேரூரில் அந்த சாதிகளின் தலைவர்கள் சமபலம் உள்ளவர்கள்தான் என்பதை பஞ்சாயத்து காட்சி மூலம் சொல்லிவிட்டார் .ஆதிக்க சாதியை சேர்ந்த பொன்வண்ணன் நல்லவர்,தாழ்த்தப்பட்ட சாதி தலைவர் ஆண்டனி சாமி கெட்டவர் ஆனாலும் இரண்டு சாதியினரும் ஒற்றுமையுடன் அதே பேரூரில் வாழ்கின்றனர் என்பதும் அந்த ஒற்றுமையை எப்படி சிதைத்து அப்பாவி உயர் சாதி சரவணன் இரையாக்கப்படுகிறார் என்பதும் கதை.. இந்த கதைக்கு காதல் ஊடு இழையாக ஓடுகிறது.
படத்தில் வருகிற பல காட்சிகள் முன்னரே பல படங்களில் பார்த்தவை என்பது சோர்வை தருகிறது. அபி சரவணனின் ..ஓ மாய் காட் !விஜய் விஷ்வாவின் சிறைச்சாலை கைதி எண் சில காட்சிகளில் வேறு பட்டு இருக்கின்றன.அவரின் முகமும் பல காட்சிகளில் வேறு படுகிறது.சாதீய வன்முறைகளை சாட வேண்டும் என்கிற நோக்கமுடன் கதை எழுதிய கதாசிரியரை , ஏழு வருடங்கள் என்பது கால மாற்றத்தை உணரச்செய்யாமல் மடக்கிப்போட்டுவிட்டது.
மொத்தத்தில் முந்தைய முகவை மாவட்டத்தின் வறட்சி !