படம் முடிந்து எழுந்து வருகையில் இரண்டு படங்களைப் பார்த்த உணர்வு.
இன்ஜினீயர் ஒருவர் ஆங்கிலம் தெரியாமல் வாய்ப்புகளை இழப்பது யதார்த்தம் .இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு கதையை அமைத்திருக்கிறார்கள். வேலை கிடைக்காமல் வெட்டி ஆபிஸராக சென்னையில் சுற்றும் இவர் நண்பனின் வீட்டில் தங்கி வாய்ப்புத் தேடுகிற இவருக்கு என்ன ஆகிறது என்பதை இயக்குநர் தினேஷ் பழனிவேல் இயல்பாக சொல்லியிருக்கிறார்.
ஹீரோவாக வெங்கடேஷ் அப்பாதுரை நடித்திருக்கிறார். இவரைத் திருத்துகிற ஹவுஸ் ஓனரம்மாவாக நடித்திருப்பவர் கேரள நடிகை . ரஜினி சாண்டி .இவரைப்பற்றி சொல்லியாக வேண்டும். நிஜத்தில் இவர் அல்ட்ரா மாடர்ன் உமன். டூ பீசில் பார்க்கப்பட்ட இவரா என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்ச்சினிமாவுக்கு நல்ல வரவு.! ஒப்பனை அவ்வளவாக தேவைப்படாத அம்மா. இப்படி ஒரு ஹவுஸ் ஓனரம்மா கிடைத்தால் எவ்வளவு சிறப்பாக வாழ்க்கை அமையும் என்கிற ஏக்கத்தை வரவழைக்கிறது. ஹவுஸ் ஓனர்களால் வதைபடுவர்களுக்கு இவர் பெரிய ஆறுதல்.!
இவரும் ,கதாநாயகன் வெங்கடேஷ் அப்பாத்துரையும்தான் படத்தினை முற்பாதியில் சுமந்திருக்கிறார்கள்.
கல்லூரி காட்சிகளை ரசித்து ,ரசிகர்களை கவரும் வகையில் சித்தரித்திருப்பது சிறப்பு.
கதையின் நாயகியாக பாவ்யா என்பவர் நமக்கு புதுமுகம். சிரமப்படுத்தவில்லை.
இப்படியாக சென்ற கதை பிற்பாதியில் வேறு ஒரு லைனில் தடதடக்கிறது..ஒரே கட்டணத்தில் இரண்டு படம் பார்த்த உணர்வு முடிவில் வருகிறது. விவசாயத்தின் அவசியத்தை உணர்த்துகிறது. விளம்பரப்படங்கள் எடுப்பது பற்றிய காட்சிகள் செமத்தியாக இருக்கிறது.
பிரபலமான நடிகர்களை வைத்து எடுத்திருந்தால் இந்த கதிர் படத்தின் ரேஞ்ச் என்னவாக இருக்கும் என்று நினைக்க வைத்திருக்கிற படம்.
கதிர் வெறுக்கத்தக்கவன் அல்லன் .பழகத் தகுந்தவன்.












