உலகநாயகன் கமல்ஹாசன் ,பகத் பாசில் , மக்கள் செல்வன் விஜயசேதுபதி ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கிற விக்ரம் படத்தின் விமர்சனம்.!
இதுதான் கதை என சொல்லப்போவதில்லை. காட்சிகளை பார்த்துக்கொண்டேயிருந்தால் போதும். காட்சிகளிலேயே கதையும் இணைந்து பயணிக்கிறது என்பதால் கதையை சொல்லும் அவசியம் தேவையில்லை.
கமல்ஹாசன் ,விஜயசேதுபதி ,பகத் பாசில் மூவரையும் இணைத்து கலவையான காட்சிகளுடன் திரைக்கதையை அமைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சிறப்பான திரைக்கதை .தொய்வின்றி கடக்கிறது. அடிதடி ,ரத்தம் ,வெறி ,இரக்கம் ,குரோதம் என கலந்து கட்டி நடித்திருப்பதால் காதலுக்கு இடமில்லாமல் போய் விட்டது. பேரனை தோளில் சாய்த்தபடி கண் கலங்குகிற உலகநாயகனுடன் நமது கண்களும் கசிகிறது . இந்த வித்தை இன்றைய சில நாயக நடிகர்களிடம் அரிதாக இருக்கிறது.மகனை கொன்று விட்டார்கள் என்கிற சேதி அறிந்த கர்ணன் ( கமல்.)அடுத்தடுத்து செய்கிற காடசிகள் வலிமையான ஒரு மனிதனின் மனப்பான்மையை காட்டுகிறது.
சந்தனமாக மக்கள் செல்வன் விஜயசேதுபதி.இவருக்கு மூன்று மனைவி என்பது தேவையற்ற திணிப்பு.அலட்டிக்கொள்ளாமல் வெற்றுடம்புடன் நடக்கும்போதே ஜில்லா போக்கிரிகளின் மாஸ்டர் என்கிற மரியாதை வந்து விடுகிறது.இரக்கமற்ற கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.!
கர்ணனுடன் (கமல் )மோதுகிற அந்த அரக்கத்தனமான பைட் ! செம.! இருவரும் தங்களின் இமேஜ் பார்க்காமல் நடித்திருப்பது உயர்வானது.இந்த மனப்பக்குவம் அனைவர்க்கும் வரவேண்டும். உலக நாயகன் ,மக்கள் செல்வன் இவர்களுக்கு இருக்கிற அந்த ‘தில்’ போற்றப்படவேண்டும்.
நாயகி ,காதல் தேவைப்படாத சப்ஜெக்ட்.
உலகநாயகனின் இமேஜ் இந்தப்படத்தில் உயர்ந்து இருக்கிறது .என்றால் அதற்கு லோகேஷ் கனகராஜின் உழைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. பத்தல பத்தல பாட்டு ,படத்தில் டைட்டில் பாடலாக வந்தாலும் கமலின் நெளிவு சுளிவுகளை அலட்சியமான ஸ்டெப்ஸ் வழியாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆடலரசன் கமல்.
பகத் பாசிலின் தேர்ந்த நடிப்பை பரவலாக பார்த்து ரசித்தாலும் அந்த ஒற்றைக்காட்சி “நாங்கள் எடுத்துக்கொண்ட அந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்துவிட்டோம் ” என்று குரல் உயர்த்தி சொல்லி அந்த போலீஸ் உயரதிகாரியிடம் விடை பெற்று வெளியேறுகிற காட்சி மாண்புக்குரியது.
ஆயுத விளையாட்டு இந்த படத்தில் அற்புதமாக இருக்கிறது. கமல் பயன்படுத்துகிற ஹெவி ரக ஆயுதங்கள் ,இதற்கு முன்னர் இந்தளவுக்கு பயன்பட்டதில்லை. உலகநாயகனின் தோள் வலிமைக்கு ஒரு காட்சி ,உருக வைப்பதற்கு ஒரு காட்சி ,எதிர்வரக்கூடிய அடுத்தப்படம் இப்படித்தான் என சொல்லியிருக்கிற பாங்கு ,சூர்யாவின் ரத்தம் தெறிக்கிற அந்த என்ட்ரி என நிறைவாக 3 மணி நேரத்தை கடந்து விடுகிறோம்.