இயக்குநர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர்,திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தலைவர், அரசியல் வாதி உள்ளிட்ட பன்முக திறமைகளை கொண்டவர டி ராஜேந்தர்.. இவருக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயத்தில் பிரச்சினை இருப்பதாகவும் வயிற்று வலி காரணமாகவும் அனுமதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த அறிக்கையில் எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் உடல்நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.
அவர் முழு சுயநினைவுடன், நலமாக இருக்கிறார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி என சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி ராஜேந்தரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியிருந்தார். இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது மகன் சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.நியூயார்க்கில் டி ராஜேந்தரின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து இன்று இரவு 9.30 மணிக்கு டி ராஜேந்தர் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்
அவருடன் அவரது மனைவி உஷா மற்றும் மகன் குறளரசன்,மகள் இலக்கியா உள்ளிட்ட குடும்பத்தினரும் உடன் செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 6.30மணிக்கு அமெரிக்கா செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த டி ராஜேந்தர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில்,”சிம்பு எனக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்தார். மேலும் கடந்த 12 நாட்களுக்கு மேலாக என்னுடனே இருக்கின்றார் சிம்பு. அவரது பட வேலைகளையும் விட்டுவிட்டு என் உடல் நிலை தான் முக்கியம் என்று என்னுடனே இருக்கின்றார்.
தற்போது எனக்கு முன்பே அமெரிக்கா சென்று என் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் சிம்பு.எனவே நான் அவரை பெற்றது என் வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம்
“நான் எனது வாழ்வில் இந்த இடத்தில் வந்து நிற்கிறேன் என்றால் அதற்கு எல்லாம் வல்ல இறைவன் மீது வைத்துள்ள நம்பிக்கையே. இறைவன் கொடுத்த அருளால் தற்போது பேசிக்கொண்டிருக்கிறேன்.
விதி, இறைவனை மீறி எதுவும் நடக்காது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”.இவ்வாறு அவர் கூறினார்.