முத்து விருதுநகர் மாவட்டத்தின் கட்டிட( கொத்தனார்.)மேஸ்திரியாக இருக்கிறார்.. வறட்டுக் கிராமம்,இடிபாடுகளுடன் சொந்தமாக வீடு இருந்தாலும் இன்னொரு வீடு புதிதாக கட்டிக்கொள்ளலாமே என்கிற ஆசை அந்த முதியவருக்கு.!
மகன் பழனியுடன் கட்டிடத்தை எழுப்புகிறார். ஒரு நாள் அதிகாலை அந்த கட்டிடத்து மாடிச் சுவருக்கு தண்ணீர் ஊற்றச்சென்றவர் தவறி விழுந்து பேச்சு ,உணர்வு தப்பி உயிருக்கு போராட்டம்.படுத்த படுக்கை.பீ ,மூத்திரம் அள்ளுவது சுத்தம் செய்வது மகனின் வேலையாகி விடுகிறது.அதை தனது கடமையாக நினைக்கிறான்.வசதியற்ற நிலையிலும் உள்ளூர் டாக்டரிடம் சிகிச்சை தொடர்கிறது.
பெரியவர் கண் முழித்தார்.பின்னர் அதுவும் மூடிக்கொண்டது.
ஊரே சொல்கிறது தலைக்கூத்தி விடு என்று.! தலைக்கூத்தல் என்றால் என்ன?
இழுத்துக்கொண்டிருக்கிற பெரிசுகளுக்கு நாலைந்து இளநியை குடிக்க வைத்து விட்டு மறுநாள் குளிர் நீரில் குளிக்க வைத்தால் ஜென்னை வந்து அந்த கிழம் உயிரை விடும்.இது விருதுநகர் மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்தது.
எழுதுவது என்னமோ வார்த்தைகளை வைத்து எழுதி விட்டோம் .ஆனால் உணர்வுகளை சொல்லும் வார்த்தைகளை விட கண்களால் பார்க்கிறபோது எழுகிற சோகம் சொல்லி மாளாது.

இவனைப்போல மகன் கோடியில் ஒருவனய்யா அவன்தான் சமுத்திரக்கனி என்று இந்திய திரை உலகத்தின் உச்சியில் நின்று முழக்கம் இடலாம்.!இன்றைய முன்னணி நடிகர்களால் முடியுமா என நினைத்துப் பார்க்க முடியவில்லை.! “அய்யா “என்று அந்த கிழட்டு அப்பனை பாசமுடன் பார்ப்பதும்,கன்னம் தடவுவதும்…அடடே.! உடம்பெல்லாம் தந்தையின் வாசம்.
ஆசையுடன் மனைவியை அணைக்க நெருங்கும் பொது அவள் கூட கடுகடுக்கிறாள்.”பீ முத்திரை நாத்தம்”என கணவனை விலக்கி விடுகிறாள்.கனி இயல்பான மென் சோகத்தை வெளிப்படுத்துகிறார்.குளித்துவிட்டு மனைவி வசுந்தரா நுழைவதை பார்த்து விட்ட கணவன் சமுத்திரக்கனி வேட்கையுடன் அணைக்க முயலுகிற காட்சி உயிரோட்டமானது.
“நானும் பிள்ளையும் அப்பன் வீட்டுக்குப்போய்விடுவோம்”என்று இயலாமையின் உச்சத்தில் மனைவி வசுந்தரா மிரட்டும் போது கூட “எனக்கு எங்க அய்யாதான் பெரிசு .நான் பாத்துக்கிறேன்”என்று மாமனார் வீட்டு உதவியை மறுக்கிறாரே ,அப்பன் மீதுதான் எவ்வளவு பக்தி.!இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
வசுந்தரா பெஸ்ட் சாய்ஸ்..ஏனோ தெரியவில்லை ,வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.இவருக்கு வரவேண்டிய வாய்ப்புகளை ஐஸ்வர்யா ராஜேஷ் அள்ளிக் கொண்டாரோ என்னவோ.!சரியான இணை.!
இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணன் அந்த முதியவர் படுத்த படுக்கையில் உயிருடன் இருப்பதற்கு அவரது இளம் வயது காதல்தான் காரணம் என துணைக் கிரகங்களாக கதிர் ,கதாநந்தி ஜோடியை சுற்ற வைத்திருப்பது மிகச்சிறப்பு. அந்த காதல் உணர்வுதான் கிழவனின் மூச்சை பிடித்து வைத்திருக்கிறது என்பதை இலக்கிய நயமுடன் சொல்லியிருக்கிறார்.கிளைமாக்ஸ் எதிர்பார்த்ததுதான்.!
இயக்குநர் வரவேற்கப்பட வேண்டியவர்.வாழ்வியலை மய்யமாக வைத்து கதைப் பின்னக் கூடியவர்..
மிகச்சிறந்த படத்தை இந்த மக்கள் வாழவைப்பார்களா?விருதுகள் கொடுப்பார்கள் !!