அறிமுக இயக்குநர் என்று சொல்லப்பட்ட மந்திரமூர்த்தி தேர்ந்த கதை சொல்லியாக மட்டுமில்லாமல் எந்தெந்த இடங்களில் வசனங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் சிறப்பாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.
இரு மாறுபட்ட கலாசாரங்கள் ஒன்று வடநாடு ,மற்றொண்டு தமிழ்நாடு.இந்த இரண்டையும் இணைக்கிற ஆன்மிகம். இதில் எங்கே சிக்கல் வருகிறது ?
மனிதம் காப்பதில்!
அயோத்தியில் இருக்கிற பல்ராம் (யஸ்பால் சர்மா.)மனைவி ஜானகி ( அஞ்சு அஸ்ராணி ) மகள் ஷிவானி ( பிரீத்தி அஸ்ராணி ) மகன் ஆகிய நால்வருடன் ராமேஸ்வரம் யாத்திரையாக கிளம்புகிறான். பல்ராம் கடுமையான ஆத்திக வாதி.கோபக்காரனும் கூட.! விடிந்தால் தீபாவளி. சூரிய உதயத்துக்குள் ராமேஸ்வரத்தில் ஸ்நானம் செய்தாக வேண்டும் என்கிற நம்பிக்கையில் பயணம் அமைகிறது.
மதுரையில் இருந்து வாடகைக்காரில் புறப்பட்ட அந்த குடும்பம் வழியில் சந்தித்த விபத்தில் ஜானகியை இழக்கிறது. சாஸ்திர சம்பிரதாயங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ள பல்ராம் மனைவியின் சவத்துடன் மதுரையில் அல்லாடுவதுதான் கதை சட்டங்களுடன் அவனது இந்து தர்மம் முரண்படுவது,முரட்டுத்தனத்தினால் சிக்கல்களை சந்திப்பது என நமது வெறுப்புக்கு உள்ளாகிறான்.
போஸ்ட் மார்ட்டம் மற்றும் எம்பாம் பண்ண அனுமதிக்க மறுப்பது, இழப்பின் தன்மை புரியாமல் தனது நலனிலேயே முனைப்புடன் இருப்பது என மிக மிக இயல்புடன் நடித்திருக்கிறார் யஸ்பால்சர்மா .சரியான தேர்வு. விடிவதற்குள் ராமேஸ்வரத்தில் இருந்தாக வேண்டும் என்கிற மூடத்தனம் எவ்வளவு பெரிய இழப்பினை ஏற்படுத்தும் என்பது புரியாமல் நடந்து கொள்ளும் விதம் நமக்கு படிப்பினை.
மனைவியாக வருகிற அஞ்சு அஸ்ரானி கணவனுடன் மாறுபட்டாலும் அவரது பதிபக்தி ஆன்மீகத்தில் முக்கி எடுக்கப்பட்டிருக்கிறது.
ஷிவானியாக பிரீத்தி அஸ்ராணி வசனங்கள் இல்லாமலேயே பாவங்களை காட்டிவிடுகிறார்.அப்பாவை அதுவரை எதிர்த்திராத பயம் மருத்துவமனையில் பொங்கி எழும்போது எப்படி திசை மாற்றுகிறது.சூப்பர். அருமை.
விமான நிலையம் .அப்பனை பிரிகிறோமே என்கிற கவலையில் கதறும் மணப்பெண்ணை காட்டும் கேமரா அப்படியே ஷிவானி பக்கமாக திரும்பும் போது எத்தகைய உணர்வுகள் நமக்குள்.!!
பசித்த சிறுவனின் முகம் என்னென்னவோ சொல்கிறதே.வெல்டன் ! கேமரா அசுரத்தனமாக வெளிக்காட்டியிருக்கிறது .வாழ்த்துக்கள் மாதேஷ் மாணிக்கம்.
சசிகுமாரை காட்டியதும் எங்கே ஷிவானியுடன் சேர்த்து வைத்து விடுவார்களோ என்கிற பயம் வருகிறது.ஆனால் அத்தகைய அபாயம் நிகழவில்லை.படத்தில் இரண்டாவது நாயகனாகத்தான் சசிகுமார் வருகிறார்.அடக்கி வாசிக்கிறார். ரசிக்க முடிகிறது.
“பெயரென்ன ?” என்று பாசம் தழுவிய கேள்வி எழுந்ததும் சசி சொன்ன அந்த ஒற்றைச்சொல்லில் தியேட்டரே கரவொலி எழுப்புகிறது.
“அப்துல் மாலிக்.”
இப்படி ஒரு காட்சியை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அமைத்தற்காக இயக்குநருக்கு மோதிரம் அணிவிக்கலாம்.
முதலில் இந்த இடத்தில் ‘தமிழ்’என்று சொல்வதாக ஸ்கிரிப்ட் இருந்திருக்கிறது. சசிகுமார்தான் அப்துல் மாலிக் என்று இருக்கலாம் என ஆலோசனை சொல்லியிருக்கிறார்.
எல்லா மதத்தவரும் கொண்டாடும் வகையில் அயோத்தி இருக்கிறது. அவசியம் பார்க்க வேண்டிய படம்.
—-தேவிமணி