சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் நடிப்பில் வெளியாகவுள்ள ‘வீரன்’ படக் குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி பேசியதாவது, ” நான் இரண்டு வருடங்கள் தனிப்பட்ட காரணங்களால் படம் எதுவும் நடிக்கவில்லை. இருந்தும் எனக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கு நன்றி! ‘வீரன்’ திரைப்படம் குடும்பங்களுக்கான ஒரு படமாக இருக்கும்.இதில் குழந்தைகளுக்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் ஒரு 90′ ஸ் கிட் என்பதால் எனக்கு சக்திமான் மிகவும் பிடிக்கும். அதுபோல, ‘வீரன்’ ஒரு தமிழ் சூப்பர் ஹீரோவாக நீண்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கும். இந்த படம் உடல் ரீதியாக மிகவும் சவாலாக இருந்தது.
அந்த அளவுக்கு ஆக்சன் காட்சிகள் எனக்கு இருந்தது. இப் படத்தில் வினய் ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் வந்ததும் படம் இன்னும் பெரிய அளவில் மாறியது. முனீஷ்காந்த், காளி வெங்கட் இருவரும் படத்திற்கு பெரிய பிளஸ். நக்கலைட்ஸ், டெம்பிள் மங்கிஸ் என யூடியூபில் திறமையுள்ளவர்களை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளோம். ‘வீரன்’ நம் மண் சார்ந்த கதை என்பதால் இசையில் நிறைய விஷயங்கள் பரிசோதனை முயற்சியாக செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குநர் சரவணன் பேசியதாவது, “கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் இந்த கதை எழுதி முடித்து விட்டேன். அப்போதே ஆதியிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையில் உள்ள ஃபேன்டசி சூப்பர் ஹீரோ விஷயங்கள் போன்றவற்றின் மீது நம்பிக்கை வைத்து இந்த கதை அவருக்கு பிடித்திருந்தது. இந்த படம் நடக்க காரணமாக இருந்த அர்ஜுன் சாருக்கும் நன்றி. ஆதி இரண்டு படம் இயக்கிவிட்டார் அவரை எப்படி ஹீரோவாக ஹேண்டில் செய்வீர்கள் என்று நிறைய பேர் சொன்னார்கள். ஆனால் அது போன்று எந்த முரணும் எங்களுக்குள் நடக்கவில்லை. அந்தளவுக்கு எங்கள் இரண்டு பேருக்கும் புரிதல் இருந்தது.
ஒளிப்பதிவாளர் தீபக்குக்கு நன்றி. எடிட்டர் பிரசன்னாவை பற்றி இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சூப்பர் ஹீரோ கதை செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, ஒரு கேரக்டருக்கு கையில் இருந்து எலக்ட்ரிக் பவர் வந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சொன்ன ஐடியா தான் கதையாக டெவலப் செய்தோம். ஆதியின் கதாபாத்திரத்திற்கு மட்டும் கீர்த்தி, கிட்டத்தட்ட ஒரு பத்து காஸ்டியூம் டிசைன் செய்தார். அவருக்கும் நன்றி. படத்தில் சூப்பர் ஹீரோ எலமெண்ட்டுடன் ஸ்டண்ட் வித்தியாசமாக இருக்கும்.
மேத்யூ சிறப்பாக செய்து இருக்கிறார். 35 – 40 நிமிடங்கள் படத்தில் சிஜி வரும். நாங்கள் கொடுக்கப்பட்டுள்ள பட்ஜெட்டுக்குள் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தோம். ஆனால் அதுவும் தாண்டி விட்டது. ஆனாலும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இன்னும் நிறைய டிபார்ட்மெண்ட் இருக்கிறது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவர்களுடைய வேலை குறித்தும் நான் பகிர்ந்து கொள்கிறேன்.
‘மின்னல் முரளி’, ‘வீரன்’ இரண்டு படத்தின் கதையும் ஒன்றா என்ற விஷயம் பலரும் கேட்கிறார்கள். ‘மின்னல் முரளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2018-ல் வெளியான போது நாங்கள் அந்த படத்தின் கதையையும், எங்கள் கதையையும் கிராஸ் செக் செய்துவிட்டோம். இரண்டும் வெவ்வேறு கதைகள். ‘வீரன்’ கதை ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே இது முற்றிலும் வேறு என்பது உங்களுக்கு தெரியும்” என்றார்.