சமுத்திரகனி இயக்கி நடித்த வினோதய சித்தம் திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் Bro எனும் பெயரில் உருவாகி உள்ளது. சமீபத்தில், நடந்த அந்த பட விழாவில் நடிகர் பவன் கல்யாண் பேசுகையில்,”தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தெலுங்கு சினிமா இன்று செழிப்பாக இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் மக்கள் எல்லா மொழி பேசும் மக்களையும் ஏற்றுக் கொண்டதுதான் காரணம். தமிழ் நடிகர்கள் மற்றும் தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே தமிழ் படங்களில் பயன்படுத்த வேண்டும் என்கிற முடிவை நீங்கள் கை விட வேண்டும். தெலுங்கு திரையுலகம் தற்போது ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை செய்து வரக் காரணமே பான் இந்தியா கான்செப்ட் தான்.
தெலுங்கு சினிமா வளர்ச்சியடைய காரணமே இங்கே தமிழ்நாட்டில் இருந்தும், கேரளாவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் பாலிவுட்டில் இருந்தும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருவதால் தான்.
அதனை விடுத்து குறுகிய வட்டத்தில் சிந்திக்கும் விதமாக நீங்கள் செயல் ஆற்றினால், நிச்சயம் உங்களது சினிமாத்துறை வளர்ச்சியடையவே முடியாது. கேரளாவில் இருந்து சுஜித்தையும், இந்தியில் இருந்து ஊர்வசி ரவுத்தேலாவையும், பாகிஸ்தானில் இருந்து நீத்து லுல்லாவையும் ஒன்றாக நடிக்க வைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது .மணிரத்னத்தின் ரோஜா, ஷங்கரின் ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்கள் தெலுங்கு தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னம் இல்லாமல் எப்படி சாத்தியமாகி இருக்கும்.
தமிழ் சினிமா துறையில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அதனை கூடிப் பேசி சரி செய்து கொள்ளலாம். பெரிய மனதுடன் நீங்கள் கொண்டு வந்திருக்கும் இந்த அதிரடி முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என பவன் கல்யாண் பேசியுள்ளார்.
சமீபத்தில் பெப்சி அமைப்பு விடுத்த அறிக்கை ஒன்றில்,” தமிழ் நடிகர்கள் மட்டுமே தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்றும் தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டுமே தமிழ் படங்களில் பணியாற்ற வேண்டும் என்றும், பிற மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த கூடாது உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றி அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.