போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியான ‘கன்னி மாடம்’ திரைப்படத்தில் தனது அழுத்தமான நடிப்பின் மூலம் முத்திரை பதித்து விருதுகளையும் பாராட்டுகளையும் வென்ற இளம் நடிகரான ஸ்ரீராம் கார்த்திக் மலையாள திரையுலகிலும் தற்போது தடம் பதித்துள்ளார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ‘பாதிராகாட்’ பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கேரள திரைத்துறையிலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
தமிழில் ‘சோல்மேட்’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக், பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா இயக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று தன்னை இன்னும் அதிக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் என்று ஸ்ரீராம் கார்த்திக் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.
“பல்வேறு வெற்றி திரைப்படங்களில் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரான அஜயன் பாலா அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் இயக்குநர் அவதாரம் எடுக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் நாயகனாக எனக்கு வாய்ப்பளித்திருப்பது என் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. அதை நான் காப்பாற்றுவேன் என்ற உறுதி எனக்கு இருக்கிறது,” என்று ஸ்ரீராம் கார்த்திக் கூறினார்.
“நடிகனாக வேண்டும் என்பது எனது லட்சியம். அந்த கனவை நனவாக்கி தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ‘கன்னிமாடம்’ முதல் இன்று வரை ரசிகர்கள் என் மீது தொடர்ந்து அன்பை பொழிந்து வருகிறார்கள். அவர்களது மேலான ஆதரவை என்றென்றும் நான் கோருகிறேன்,” என்று ஸ்ரீராம் கார்த்திக் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தரமான திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன். சவாலான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற வேண்டும் என்பதே எனது ஆசை,” என்று கூறினார்.




