கார்த்தியின்  25 வது பட விழா,சென்னையில் நடக்கிறது!

நடிகர் கார்த்தியின்  25வது படமாக  ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகி வருகிறது . வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.இந்நிலையில் கார்த்தியின் 25வது படவிழா மற்றும்  இப்படத்தின் டிரைலர்  வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து   படத்தயாரிப்பாளர்  எஸ்.ஆர்.பிரபு கூறுகையில்,

“’ஜப்பான்’ கார்த்தியின் திரையுலக பயணத்தில் 25வது படம் என்பதால் அதை கொண்டாடும் விதமாக ‘கார்த்தி 25’ என்கிற பெயரில் இதை மிகப்பெரிய நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்தோம். கூடவே ‘ஜப்பான்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் இணைத்து இதை வரும் நவம்பர் 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த இருக்கிறோம். இந்த விழாவில் கடந்த 20 வருடங்களாக கார்த்தியுடன் இணைந்து பயணித்த, தயாரிப்பாளர்கள், பணியாற்றிய சக நட்சத்திரங்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறோம்.
கார்த்தி சினிமாவில் நுழைந்து 20 வருடம் ஆகிவிட்டது. ஆனாலும் செலெக்ட்டிவாக படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால் இப்போது தான் 25வது படத்தை தொட்டுள்ளார். அவற்றில் 17 படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை. அதில் குறிப்பிடத்தக்க 5 படங்களை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது என்பது பெருமைப்படத்தக்க விஷயம். சகுனி, தீரன் அதிகாரம் ஒன்று, காஷ்மோரா, கைதி, சுல்தான் ஆகிய படங்களை தொடர்ந்து ஜப்பான் எங்களது தயாரிப்பில் கார்த்திக் நடிக்கும் ஆறாவது படமாக உருவாகியுள்ளது,
பொதுவாக இதுவரை கார்த்தி நடிக்கும் படங்களுக்கு அவருக்கு ஏற்ற ஒரு கதையை எழுதிவிட்டு இயக்குநர்கள் அவரிடம் வருவார்கள். ஆனால் கார்த்தியிக்கு இயக்குநர் ராஜு முருகனின் முந்தைய படங்களின் ஸ்டோரி டிரிட்மென்ட் பிடித்திருந்தது. அதனால் அவரிடம், உங்களிடம் ஏதாவது ஒரு கதை இருக்கிறதா என்று முதன்முதலாக கார்த்தி கேட்டிருக்கிறார் என்றால் அது ராஜூ முருகனிடம் தான். அப்போது அவர் சொன்ன ஐடியா நன்றாக இருந்தாலும் அந்த சமயத்தில் கொஞ்சம் சீரியஸ் ஆக இருந்தது. கார்த்தியின் டிரேட் மார்க்கோடு வரும் படமாக இருந்தால் நன்றாக இருக்கும் என கேட்டபோது இன்னொரு ஐடியாவுடன் வந்தார் ராஜூ முருகன். அது கார்த்திக்கும் பிடித்து இருந்தது. 
இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் பிடித்த மாதிரி ஒரு கதாபாத்திரம் அமைந்து இரண்டும் இணையும் இடத்தில் இருந்து இந்த கதை உருவாக துவங்கியது. 
அதேசமயம் இயக்குனர் ராஜு முருகனுக்கான தனி முத்திரை இப்படத்திலும் இருக்கும். இயல்பாகவே அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அது படம் முழுவதும் பிரதிபலிக்கும்.. நீண்டநாள் கழித்து ஒரு ஆக்சன் திரில்லர் பாணியில் இந்த படத்தை அவர் இயக்கியுள்ளார். நையாண்டி கலந்த காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது
நீங்கள் டீசரில் பார்த்த அதே ‘மூட்’ படம் முழுவதும் இருக்கும். இதுபோல முழுநீள நக்கல் நையாண்டி கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. வழக்கமாக சீரியஸான ஆக்சன், இல்லையென்றால் குடும்ப அம்சம் கொண்ட கதைகளில் கார்த்தி நடித்து வந்தார். ஆனால் இது ஒரு ஹெய்ஸ்ட் திரில்லர் மற்றும் புலனாய்வு பின்னணியில் மல்டி ஜானர் கலந்து இருக்கும். அதே போன்று நகைச்சுவையும் வலிந்து திணித்தது போல இல்லாமல் இயல்பாக கதையுடன் இணைந்து இருக்கும். மொத்தத்தில் ஜப்பான் கேரக்டர் எல்லோருக்கும் பிடிக்கும்.
 தீபாவளி ரிலீஸில் கூடவே ஒரு படம் வெளியாகிறது.  அதுமட்டுமல்ல மூன்றாவதாக ஒரு படம் வெளியானாலும் கூட எங்களது படத்திற்கு என இருக்கும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற திரையரங்குகளும் காட்சிகளும் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கேஜிஎப், பீஸ்ட் படங்கள் ஒன்றாக வெளியான சமயத்தில் தினசரி ஆறு காட்சிகள் ஓடும் அளவிற்கு இங்கே ஒரு சிஸ்டம் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது. எங்களது படத்திற்கு எத்தனை திரையரங்குகள் கிடைக்கின்றன என்பதை விட எத்தனை பேர் இந்த படத்தை பார்க்க விரும்புகிறார்கள் என்பதில் தான் படத்தின் வெற்றியே இருக்கிறது. 
இந்த படத்தில் கார்த்தி ஒரு பாடலை பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் அவரே பாடியுள்ளார். ஏற்கனவே அவர் ஒரு மெலடி பாடலையும், சர்தார் படத்தில் முருகன் பாடலையும் பாடியிருந்தார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு அவரே பாடினால் நன்றாக இருக்கும் என முடிவு செய்து அவரை பாட வைத்தோம்.
அடுத்த வருடம் வளரபோகும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக எங்களது ‘கைதி 2’ இருக்கும். இதுதவிர வேறு கதைகளும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். எல் சி யு என்பது ஒரு புதிய விஷயம் தான். ஹாலிவுட்டில் மார்வெல் போன்ற படங்களில் இதுபோன்ற விஷயங்களை செய்துள்ளார்கள். ஆனாலும் அது ரொம்பவே அரிதாக நடப்பது தான். இங்கே இது ஏதேச்சையாக நடந்த விஷயம். விக்ரம் படம் முடிகிற தருணத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படி ஒரு ஐடியா இருக்கு என்று சொன்னபோது நன்றாக இருக்கிறது என்று தான் நினைத்தோமே, தவிர அதை நாங்கள் கமர்சியலாக பார்க்கவில்லை. அதற்கு பணம் வேண்டும் என கேட்டிருந்தால் கூட அப்படி ஒரு விஷயம் என்னவென்றே தெரியாமல் பணம் தருவதற்கு அவர்களும் தயங்கி இருப்பார்கள். அந்த படத்தில் கமல் சாரும் ஈகோ பார்க்காமல் இந்த எல்சியு-வுக்கு ஒத்துக்கொண்டது அவரது பெருந்தன்மை. இப்போது லியோவில் கமல் சாருடன் நாங்களும் இதே எல்சியுவை தொடர எந்த ஈகோ இல்லாமலும் ஒப்புக்கொண்டோம். ரசிகர்களும் அதை அழகாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸில் கமர்சியல் படங்கள் மட்டுமல்லாது கருத்தான படங்களையும் தயாரித்து வருகிறோம். காரணம் சமூகம் மற்றும் பண்பாடு பற்றிய விஷயங்களை பதிவு பண்ணுகிற ஒரு ஊடகமாகவும் சினிமா இருக்கிறது. அதனால் எங்களுக்கும் ஒரு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. மேலும் எனது சுயமதிப்பும் அதிகம். நாங்களும் கமர்சியல் படங்கள் பண்ணுகிறோம். ஆனால் அதில் குறைந்த அளவில்தான் எங்களது லாபம் இருக்கும். தப்பான வசூல் கொடுக்கக்கூடிய படம் நம் வாழ்க்கையில் இரண்டு மூன்று வருடங்களை எடுத்துக் கொள்ளும்” என்று கூறினார்.