‘சேரி’ மொழி சர்ச்சை: குஷ்புவுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

நடிகை திரிஷாகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலானது.  இதைத்தொடர்ந்து நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பாகியது. இதையடுத்து, நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட நடிகை, நடிகர்கள் சமூக வலைதளங்களில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும், நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். அப்போது நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த நடிகை குஷ்பு, இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், பிறர் செய்த தவறுகளை உதாரணம் காட்டி, தங்களது தவறுகளை சிலர் மறைக்க முயற்சிப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்து சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மணிப்பூரில், பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதற்கு கருத்து தெரிவிக்காமல், நடிகை என்பதால் திரிஷாவுக்கு மட்டும் கருத்து தெரிவிப்பதா என குஷ்புவுக்கு சற்று காட்டமாக பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இணையவாசி ஒருவர் குஷ்பூவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு  பதில் அளித்த குஷ்பூ. “திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும். மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். நடிகை குஷ்புவின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. குஷ்புவின் பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருப்பதாகவும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார் எச்சரித்துள்ளார்.

 இந்நிலையில்,தனது சொல்லாடலை நியாயப்படுத்தும் விதமாக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு எக்ஸ் தளத்தில் விளக்கமளித்தார். அவரளித்துள்ள விளக்கத்தில், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக தாம் எப்போதும் முன்னணியில் நிற்பேன் என்றும், பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லை தாம் பயன்படுத்தியதாகவும் குஷ்பு விளக்கமளித்துள்ளார்.
குஷ்புவின் இந்த விளக்கத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம்  தனதுடுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில், “தெலுங்கு மொழியில் ‘ரேப்’ என்றால் நாளை என்று அர்த்தம், அதனால் மன்சூர் அலி கான் பயன்படுத்திய வார்த்தைக்கு நாளை என்று அர்த்தமா? இப்படித்தான் கீழ்த்தனமாக உங்கள் தவறுகளில் இருந்து தப்பிக்க நினைப்பீர்களா? தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டு அதில் இருந்து கடந்து செல்லுங்கள், இல்லையென்றால் பிறர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? உலகத்துக்கே தெரியும் நீங்கள் அந்த வார்த்தையை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தினீர்கள் என்று புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துகொள்ளதீரகள்” என்று தனது கணடனத்தை பதிவிட்டுள்ளார்
குஷ்புவின் விளக்கத்திற்கு எதிராக காயத்ரி ராகுராம் வெளியிட்டுள்ள  இப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.