முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவான ‘பைரி’!

டி கே புரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜாண் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் திரை உலகில் இதுவரை இல்லாத முயற்சியாக முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பைரி’ பாகம்-1.

இப்படத்தின் உள்ளடக்கத்தால் பெரிதும் கவரப்பட்ட “சக்தி பிலிம் பேக்டரி” சக்திவேலன் ‘பைரி’ பாகம்-1ன் அனைத்து விநியோக உரிமையையும் பெற்று வரும் பிப்ரவரி மாதத்தில் திரையரங்குகளில் வெகு விரைவில் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள நிலையில், இதன் டீசரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டனர். இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் டீசரை கண்டு மகிழ்ந்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தென் தமிழ்நாட்டில் நடைபெறும் கதையை மையமாகக் கொண்டு ‘பைரி’ பாகம்-1 திரைப்படம் எவ்வாறு இருக்கும் என்பதை பறைசாற்றும் வகையில் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் டீசர் அமைந்துள்ளது.

தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வரும் புறா பந்தயத்தில் இளைஞர்கள் எவ்வாறு கலந்து கொள்கிறார்கள், எவ்வளவு மெனக்கெட்டு புறாக்களை தயார்படுத்துகிறார்கள் உள்ளிட்ட பலவற்றை பற்றி டீசர் சுவாரசியமாக விவரிக்கிறது.

‘பைரி’ என்பது ஃபால்கன் எனப்படும் பருந்தின் பெயர். அந்த பெயர் இந்த கதைக்கு மிக பொருத்தமாக இருப்பதால் அதை தேர்வு செய்ததாக இயக்குநர் ஜாண் கிளாடி கூறினார்.

“பந்தயத்திற்காக புறா வளப்பவர்களின் மிகப் பெரிய எதிரி பைரி தான். ஒருவர் 30 புறாக்கள் வளர்த்தால் பந்தயத்திற்கு 3 புறாக்கள் செல்வதே பெரிய விஷயம். புறாக்களை பைரி தூக்கி செல்வது வாடிக்கையான ஒன்று. இது போன்று தான் மனிதர்களின் வாழ்க்கையிலும் உயரத்தில் இருப்பவர்களை கடந்து ஒரு சிலரே சாதிக்க முடிகிறது. இதை மையமாக வைத்து தான் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது,” என்று ஜாண் கிளாடி மேலும் கூறினார்.

புறா பந்தயம் பற்றி மட்டுமின்றி ஒரு தாய் மகனுக்கிடையே உள்ள பாசத்தை பற்றியும் இப்படம் பேசுகிறது, என்று ஜாண் கிளாடி தெரிவித்தார். இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் புறா பந்தயத்தில் நிஜமாக ஈடுபடுபவர்கள் நடிக்கின்றனர்.

இவர்களை தவிர, முக்கிய கதாபாத்திரங்களில் ஜாண் கிளாடி, ரமேஷ் ஆறுமுகம், வினு, சரண்யா ரவிச்சந்திரன் கார்த்திக் பிரசன்னா, தினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த கதைக்கு தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்த பிறகே படத்துக்கான பணிகளை துவங்கியதாக ஜாண் கிளாடி தெரிவித்தார்.

ஏ வி வசந்த குமார் ஒளிப்பதிவு பணிகளை கையாண்டுள்ளார், படத்தொகுப்பை ஆர் எஸ் சதீஷ் குமார் கவனிக்க, ‘தடம்’, புகழ் அருண் ராஜ் இசையமைக்க, பாடல்களை கார்த்திக் நேத்தா, மோகன் ராஜன், பொன் மனோபன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

டி கே புரொடக்ஷன்ஸ் சார்பாக, வி துரைராஜ் தயாரிப்பில், ஜாண் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர் நடிப்பில் புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பைரி’ பாகம்-1 திரைப்படத்தை சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியிட உள்ளது.