நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்குகிறார்!
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் விஷாலும் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அரசியல் பணிகளில் நடிகர் விஷால் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்பு மனு தள்ளுபடி ஆகி விட்டது.தனது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் நல இயக்கம்’ என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார். பூத் கமிட்டிகளையும் உருவாக்கி இருக்கிறார்.
வெளியூர்களில் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள ரசிகர்களை சந்திப்பதையும், கிராம மக்களிடம் குறைகள் கேட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார்.தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்து இருக்கிறார்.
தமிழகம் முழுவதிலும் உள்ள தனது மக்கள் நல இயக்க முக்கிய நிர்வாகிகளை விஷால் விரைவில் சென்னைக்கு அழைத்து பேசவுள்ளதாகவும் அக்கூட்டத்தில் புதிய கட்சி குறித்தும் இளைஞரணி, மகளீரணி, மாணவரணி மருத்துவர் அணி,வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளின் செயல் பாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாம்.குறிப்பாக விஷால் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பின்னர் விஷால் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார் என்கிறார்கள்.மேலும் நடிகர் விஜய் போலவே நடிகர் விஷாலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஷால் கட்சி போட்டியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.