விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும்,’ரெட் ஃப்ளவர்’!

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரிக்கும் இப்படத்தில் ‘கிழக்கு சீமையிலே’, ‘ராமன் அப்துல்லா’, ‘ஆச்சார்யா’ புகழ் நடிகர் விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

திரைப்படம் பற்றி இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசுகையில், “இப்படத்தின் முழு தலைப்பு ‘ரெட் ஃப்ளவர் மிஷன் ஃபாரெவர்’ என்பதாகும். இது ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லராக இருக்கும். இரட்டை சகோதரர்களான விக்கி மற்றும் மைக்கேலை சுற்றி கதை சுழல்கிறது. இந்திய இராணுவத்தில் சேர்வதில் தீரா ஆர்வமுள்ள இந்த இரண்டு பாத்திரங்களிலும் விக்னேஷ் நடிக்கிறார். மூன்றாம் உலகப் போருக்குப் பின், ஐரோப்பிய யூனியன் அதிகாரமிக்க வல்லரசாக உருவெடுக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம் உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கிறது, மேலும் படையெடுப்பு அச்சுறுத்தலையும் விடுத்து, பதட்டமான சர்வதேச சூழலை உருவாக்குகிறது. இதை எதிர்கொள்ள ஒரு துணிச்சலான ரகசிய நடவடிக்கையை இந்திய அரசு திட்டமிட, இரட்டை சகோதரர்கள் தடைகளை முறியடித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிடியில் இருந்து இந்தியாவைக் காக்க எவ்வாறு உதவுகிறார்கள், அவர்களது முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதே கதை. படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது,” என்று கூறினார்.

மனிஷா ஜஷ்னானி நாயகியாக நடிக்க, ரஷ்ய நடிகர்கள் ஆண்ட்ரே இலபிச்சேவ் மற்றும் மெஹ்தி ஷா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நாசர், ஒய் ஜி மகேந்திரா, சுரேஷ் மேனன், தலைவாசல் விஜய், அஜய் ரத்னம், மோகன் ராம், லீலா சாம்சன் மற்றும் கோபி கண்ணதாசன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘ரெட் ஃப்ளவர்’ படத்திற்கு கே. தேவ சூர்யா ஒளிப்பதிவு செய்ய,
சந்தோஷ் ராம் இசை அமைக்க, அரவிந்தன் ஆறுமுகம் படத்தொகுப்பை கையாள்கிறார். விஎஃப்எக்ஸ் துறையை பிரபாகரன் கவனிக்க, சண்டைக்காட்சிகளை இடி மின்னல் இளங்கோ வடிவமைத்துள்ளார். பாடல்களை மணி அமுதவன் எழுதுகிறார்.

தயாரிப்பு வடிவமைப்பாளராக கே.கார்த்திக், தயாரிப்பு நிர்வாகியாக அன்புசெல்வன் பணியாற்றுகின்றனர். ஏ.பி.முகமது ஒப்பனையை கவனிக்க, தேனி சீனு ஸ்டில்சுக்கு பொறுப்பேற்க, நவீன் குண்ராஜ் திரைப்படத்திற்கு தேவையான ஆயுதங்களை வழங்குகிறார். ஏ.அமல் ராஜ் ஆடைகளை வடிவமைக்கிறார். ராகினி கிருஷ்ணன் டிசைன்களுக்குப் பொறுப்பேற்றுள்ளார். ஹரி பிரியா, நரேஷ் ஐயர், ரணினா ரெட்டி, தீபக் ப்ளூ ஆகியோர் இப்படத்தில் பாடல்கள் பாடியுள்ளனர். தேசிய விருது பெற்ற தாமஸ் குரியன் ஒலி வடிவமைப்பாளராக பங்காற்ற, ஜெயந்தன் சுரேஷ் ஒலி கலவையை கவனிக்கிறார்.

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே.மாணிக்கம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ரெட் ஃப்ளவர்’ ஆக்ஷன் திரைப்படம் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் வகையில் பான்-இந்தியா திரைப்படமாக தயாராவதாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்துள்ளார்.