நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த 2ஆம் தேதி தொடங்கினார். இந்த கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்து பிழை பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.தனது கட்சியின் பெயரில் தமிழ் மொழியையே காக்க முன் வராத விஜய் எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார் என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர் . இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நியாயமான விமர்சனங்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என விஜய் கூறியிருந்தார். இதையடுத்து நேற்று தனது கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்து திருத்தம் செய்து அதிகாரப்பூர்வமாகவும் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து இவருடைய கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் வெளியிடுவார் என்கிறார்கள். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 9 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை செயலக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில்
தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
இதையடுத்து கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தப்பட்டது .மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் விரிவான விவாதம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இக்கட்சியின் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,” நம் தலைவர் அவர்களின் ஆணைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும்.
* நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள். சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
* தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும்.
* ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள, புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ரீதியாகவும், சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள். தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலின் நகலை முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்.
* மாவட்ட சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். பூத் கமிட்டி அமைத்து, பூத் வாரியாக வாக்காளர்களில் கட்சி சார்புள்ளவர்கள் யார்? யார்? எந்தக் கட்சியையும் சாராதவர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* நமது கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதைக் கடமையாகக் கருத வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அறிவித்து, தலைவா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் நமது இலக்கு குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அதனை மாவட்ட சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.