வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் படத்தைத் தயாரிப்பில், ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் அர்ஜுனன் ’ஜீனி ‘ படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜெயம் ரவியுடன் , கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கபி மற்றும் தேவயானி ஆகியோர் நடித்துள்ளனர். லெஜெண்டரி ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அர்ஜுனன் , “ஜெயம் ரவியுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஸ்கிரிப்ட் விவாதங்கள் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். ஆனால், படப்பிடிப்பை அரை நாளில் முடித்து விடுவோம். ஒரு சரியான ஷாட்டுக்காக கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்” என்றார்.
படம் குறித்து மேலும் அவர் கூறியதாவது, “குடும்பம் மற்றும் ரிலேஷன்ஷிப்பை மையமாகக் கொண்டு ஆக்ஷன், ஃபன், எமோஷன் போன்ற விஷயங்கள் கலந்து ’ஜீனி ‘ திரைப்படம் உருவாகி இருக்கிறது. மேலும், படம் வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டது என்பது அதன் முதல் பார்வையில் இருந்து தெரிகிறது. ஒரு தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளை சுற்றி படம் இருக்கும். வன்முறை, போதைப்பொருள் மற்றும் இரத்தம் இதெல்லாம் இல்லாமல் மகிழ்ச்சியான ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுப்பதுதான் என் நோக்கம். கிட்டத்தட்ட 75% படப்பிடிப்பை முடித்துள்ளோம். இன்னும் 3 பாடல்கள் மட்டுமே உள்ளன. அதோடு படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து விடும்” என்றார்.
மேலும், ஜெயம் ரவிக்கு இந்தப் படத்தில் இதுவரை பார்க்காத முற்றிலும் புதுமையான மற்றும் ஆச்சரியமான தோற்றத்துடன் கூடிய அசாதாரண கதாபாத்திரம் என்பதையும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.