DeAr.டியர் ( விமர்சனம்.) சுகமான குறட்டை. ! குடும்பமுடன் ரசிக்க !!

குறட்டையினால் கணவன் -மனைவி இடையில் பிரச்சனை வருமா?
வரும் . வந்தே தீரும் என்கிறது டியர் படக் கதை. மனைவியின் பெயர் தீபிகா. deepika . ஆங்கிலப்பெயரின் முதல் இரண்டு எழுத்து De . இதனுடன் கணவன் அர்ஜூன் பெயரில் இருக்கிற முதல் இரண்டு எழுத்துக்களான Ar ஐ சேர்த்து DeAr என்பதாக புத்திசாலித்தனமாக டைட்டிலை வைத்து இருக்கிறார்கள்.
இந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களில் பார்க்கக்கூடிய படமாக இந்தப்படம் அமைந்திருப்பது மக்கள் செய்த புண்ணியம். கருத்து சொல்கிறேன் என்று கழுத்தை அறுக்கவில்லை
படத்தில், ஜி.வி .பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், நந்தினி, ‘தலைவாசல்’ விஜய் , ரோகிணி, இளவரசு, கீதா கைலாசம், ஜெ.கமலேஷ், அப்துல் லீ, மகாலட்சுமி சுதர்சனன் ஆகியோர் நடித்துள்ளனர்..காளி வெங்கட்டுக்கு வெயிட்டான கேரக்டர். அழகான ஜோடி.
அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இசை ஜி.வி .பிரகாஷ் குமார், படத்தொகுப்பு ருகேஷ், தயாரிப்பு நட்மெக் புரொடக்ஷன்ஸ், வெளியீடு ரோமியோ பிக்சர்ஸ் .
தனியார் தொலைக்காட்சியில், செய்தி வாசிப்பாளராக பணிபுரிகிற, ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு உயர்ந்த இடத்தை பிடிக்கவேண்டும் என்பது லட்சியம். சிறிய சத்தம் கேட்டாலே விழித்துக்கொள்ளும் சுபாவம் கொண்டவர், இவருக்கு நேர் எதிர் சுபாவம் கொண்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதாவது பலத்த ‘குறட்டை’ சத்தத்துடன் ஆழ்ந்து தூங்கும் சுபாவம் கொண்டவர். இவர்கள் இருவருக்கும், பெற்றோர்களின் விருப்பப்படி திருமணம் நடக்கிறது.தங்களின் தூக்க பழக்கம் பற்றி முதலிரவில் சொல்லிக் கொள்கிறார்கள்.
குறட்டையை சமாளிக்க அஜன்டா போட்டாலும் ஆவதில்லை என்கிற கட்டத்துக்கு போய் விடுகிறது. லட்சிய இலக்கை அடைந்த ஜீவிபிக்கு லாட்டரி அடித்த மாதிரி வாய்ப்பு வந்தது. மத்திய மந்திரியை இன்டர்வியூ செய்ய வேண்டும். மனைவியின் குறட்டையினால் தூக்கத்தை தொலைத்த ஜீவிபி, சம்பவ நேரத்தில் பாத்ரூமில் உறங்கிவிட்டதால் அந்த வாய்ப்பு பறி போக வேலையும் காலி !
டைவர்ஸ் செய்ய ஜீவிபி வழக்கு தொடர ,மறுப்பு தெரிவிக்கிறார் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் . முடிவு என்ன? நீதி மன்றம் என்ன சொல்கிறது.?கணவன் மனைவி இடையே ஆன குறட்டைக்கு என்ன தீர்ப்பு கிடைத்தது ?
சூப்பர் திரைக்கதை. ஜிவிபி -ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கதையின் கேரக்டர்களை சிறப்புடன் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 
அண்ணன் காளி வெங்கட் சாப்பிட டேபிளுக்கு வந்தவுடன் பயந்தபடி பார்ப்பது, அண்ணியின் சிபாரிசுடன், அண்ணனிடம் தனது விருப்பத்தினை வெளிப்படுத்துவது என, பல காட்சிகள். ஹைலைட்டான சிறந்த காட்சி என்றால், ஐஸ்வர்யா ராஜேஷ், கருவை கலைக்க ஆஸ்பத்திரியில் அமர்ந்திருக்கும் நேரத்தில், பதறிப் போய் கருவை கலைக்கவிடாமல் சண்டையிடும் காட்சியை சொல்லலாம். இது போல் பல காட்சிகள்.
ஐஸ்வர்யா ராஜேஷூம் தனது கதாபாத்திரத்தினை உள்வாங்கி சிறப்பாக நடித்து இருக்கிறார். அவரது கதாபாத்திரமே சிறப்பான நடிப்பினை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஜி வி பிரகாஷை விட்டுப்பிரிய மனமில்லாமல், அழுவதும் பின்னர் சூழ்நிலையை புரிந்து கொண்டு தைரியமாக வலம் வருவது. மாமியார் ரோகிணியை அவரது கணவர் தலை வாசல் விஜய்யிடம் சேர்த்து வைப்பது. என, பல காட்சிகளில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். ரொமான்ஸிலும் அசத்துகிறார்.
ரோகிணி. கீதா கைலாசம், இளவரசு, பிளாக் ஷீப் நந்தினி உள்ளிட்ட அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்
ஜி வி பிரகாஷ் குமார் இசையில், பாடல்கள், ஒரு பாடல் பழைய பாடலை நினைவு படுத்துகிறது.
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு சூப்பர்.
பிரச்சனைகளை எதிர்கொண்டு, தவிர்க்க முடியாவற்றை சகித்துக் கொண்டு, அன்பினை பகிர்ந்து வாழ பரிந்துரைக்கிறது, டியர்.
டியர் – குடும்பத்துடன் ஏசியில் அமர்ந்து பார்க்கலாம்
—தேவிமணி