புலனாய்வு திரில்லராக உருவாகும் ,’லெவன்’!
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோரது தயாரிப்பில்,தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக உருவாகும் புதிய படம்,’லெவன்’.
இப்படத்தில் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இணையத் தொடர், ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் சசிகுமாரின் ‘பிரம்மன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார்.’சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்க ,இவர்களுடன்,’விருமாண்டி’ அபிராமி, ஆடுகளம் நரேன், ‘வத்திக்குச்சி’ திலீபன், ‘மெட்ராஸ்’ ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் வெளியான ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
இப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் கூறுகையில்,”.ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் இப்படம் அமையும் என்று நம்புகிறேன்,
விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வரும் ஜூன் மாதம் 15 ம் தேதி வெளியாகிறது.பரபரப்பான இந்த டீசர் இப் படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கும் ” என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை கார்த்திக் அசோகன் கவனிக்க, டி. இமான் இசையமைத்து வருகிறார்.