மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ‘புஷ்பா 2.’
படம் வெளியாவதற்கு முன்னரும் பின்னரும் பிரச்சனைகளை சந்தித்து பரபரப்பு கூட்டியது. ரெட்டை இசை அமைப்பாளர்கள் என்றாலே உரிமை கோரல் விவகாரங்கள் கூடு கட்டிவிடும். தேவி ஸ்ரீ பிரசாத் ,சாம். சி. எஸ். இருவரும் இனிமேல் பேசிக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.!
ஆந்திர திரை உலகத்தில் அல்லு அர்ஜுனுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. போட்ட காசுக்கு நட்டம் வராது என்கிற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. அதன் விளைவுதான் இந்தப் படம்.
செம்மரக்கடத்தலை மைய்யமாக வைத்து முதல் பாகம் பணம் அள்ளியது. ராஷ்மிகாவின் கவர்ச்சியும் ஆட்டமும் பக்கத்துணையாக அமைந்திருந்தது. கூலி தொழிலாளியாக இருந்து கடத்தல் தொழிலுக்கு தலைமை ஏற்ற வளர்ந்த அல்லுவை இரண்டாம் பாகத்தில் பதவி இறக்கம் செய்யப் பார்க்கிறார்கள். அதை அவர் எப்படி முறியடிக்கிறார் என்பது புஷ்பா 2.
உழைப்பினை கொட்டியிருக்கிறார் அல்லு அர்ஜூன். இவரை வைத்துக்கொண்டு இயக்குநர் சுகுமார் எப்படியெல்லாம் காட்சிகள் அமைக்கலாமோ ,அப்படியெல்லாம் விளையாடி லாஜிக்கை நிர்வாணமாக்கி இருக்கிறார். வென்றாக வேண்டும் என்கிற வெறியுடன் பணத்தை செலவழித்து தீபாவளி கொண்டாடி விட்டார்.
சண்டைக் காட்சிகளில் பிரமாண்டம். இரண்டு கைகள் கால்களையும் கட்டிக்கொண்டு பறந்து பறந்து சண்டை.! எதிரிகளின் குரல்வளையை கடித்து துப்பும் சாகசம். அரசியலில் அசுரத்தனம் என அடுத்த சீப் மினிஸ்டர் போஸ்ட்டுக்கு அல்லு துண்டு போட்டிருக்கிறார், இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்குமளவுக்கு மிரட்டலான காட்சிகள்..
எக்ஸ்ட்ரா உபகரணங்கள் உதவியுடன் எடுப்பும் மிடுக்குமாக இயற்கை அழகை வாரி வழங்கி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. விடலைகளின் ரசனைக்கு வெறியேற்றும் நடன ,அசைவுகள். மந்தனாவின் விழிகளில் காமம் வாழ்கிறது.
நடிப்பால் எல்லா இடங்களிலும் வரவேற்பைப் பெறுகிறார் பகத் பாசில்.
ஆடுகளம் நரேன், ராவ் ரமேஷ், சுனில் அவர் மனைவி அனுஷ்யா,ஒன்றிய அமைச்சராக வரும் ஜெகபதிபாபு ஆகியோர் சிறப்புடன் கடமையாற்றியிருக்கிறார்கள்.
ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் ஸ்ரீலீலா.
தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள்.சாம்,சி.எஸ். சின் பின்னணி இசை . இருவரும் கும்மாங்குத்து ரசனையுடன் போட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மிரோஷ்லவ் புரோன்ஷெக் இந்தப் படத்தின் பிரமாண்டத்துக்கு உதவி இருக்கிறார்.
இயக்குநர் சுகுமார்,முதல் பாகத்தின் வெற்றி மிதப்பில் இரண்டாம் பாகத்தை கிண்டி இருக்கிறார்.
புஷ்பா 2 வை அல்லுவும் மந்தனாவும் வேட்டை ஆடிவிட்டார்கள்.
மகனே உன் சமத்து,!
–தேவிமணி.













