நடிகர் ரஜினிகாந்த் 74-வது பிறந்தநாள்: திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தனது 74வது பிறந்த நாளை ஜெய்ப்பூரில் நடந்த கூலி படப்பிடிப்பபில் படக்குழுவினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார் இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் – ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என கூறியுள்ளார்.  அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ரஜினிகாந்துக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,”தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து. திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள ரஜினி, பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மகிழ்விக்க வாழ்த்துகிறேன் எனக்  கூறியுள்ளார்

 நடிகர் கமல்ஹாசன் தனது ‘எக்ஸ்’ தள பதிவில், “அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க. என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது ‘எக்ஸ்’ தள  பதிவில் கூறியுள்ளதாவது,”பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
 அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் .
தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,” இன்று தனது 75-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பரும், பத்மவிபூஷண், தாதா சாகெப் பால்கே விருது உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான ‘சூப்பர் ஸ்டார்’  ரஜினிகாந்துக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்”. என குறிப்பிட்டுள்ளார்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
“எவரையும் கவர்ந்திழுக்கும் ஈர்ப்புமிக்க நடிப்பாற்றலாலும், தனித்துவமிக்க நடை, உடை, பாவனைகளாலும், நேர்த்தியான உடல்மொழியாலும் மக்கள் மனதை வென்று, இந்தியத் திரையுலகை தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த திரை ஆளுமை. திரைத்துறையில் இருந்த நிற ஆதிக்கத்தை உடைத்துத் தகர்த்து, தனது ஆகச்சிறந்த நடிப்பால் அனைவரையும் தன்வசப்படுத்தி, திரை வானில் மிளிரும் உச்ச நட்சத்திரம்! காலங்கடந்தும் ரசிக்கும்படியான நடிப்பினைக் கொடுத்து, மூன்று தலைமுறையினரை மகிழ்வித்த ஆகப்பெரும் திரைக்கலைஞர்! பணம், புகழ், பெயர், செல்வாக்கு என எல்லாவற்றிலும் உச்சம் தொட்டாலும், அவற்றைத் துளியும் தலைக்கேற்றாது பணிவோடும், திறந்த மனதோடும் எல்லோரையும் அணுகும்  தன் நிலை எந்நாளும் மாறாத பெருமகன்! பெருமதிப்பிற்குரிய ரஜினிகாந்த்துக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். என பதிவிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,

நடிகர் நண்பர் ரஜினிகாந்த் இன்று 75ம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,

எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்