‘சியான்’ விக்ரமின் 63 வது பட அறிவிப்பு வெளியானது!
தங்க லான் படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் அடுத்ததாக சித்தா பட இயக்குநர் அருண்குமாருடன் இணைந்து வீர தீர சூரன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக சியான் 63 படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை கொடுத்துள்ள இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் தனது 63 வது படத்தில் இணையவுள்ளார். இதுகுறித்து சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,”எங்கள் மூன்றாவது தயாரிப்பை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறோம். கோடிக்கணக்கான மக்களை தனது நடிப்பின் மூலம் மகிழ்வித்து, மறக்க முடியாத கதாபாத்திரங்களையும் முன்னோடியான படங்களையும் வழங்கிய நடிகர் சியான் விக்ரமுடன் கை கோர்ப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம்.
இந்த திரைப்படத்தை மண்டேலா மற்றும் மாவீரன் போன்ற சிறந்த படைப்புக்களை உருவாக்கிய மடோன் அஷ்வின் இயக்கவுள்ளார். அவரது தனித்துவமான கதை சொல்லும் திறன் எங்களை மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற தூண்டியுள்ளது.
உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உயர்தரமான ஒரு திரைப்படத்தை வழங்கும் உறுதியுடன் நாங்கள் இந்த பயணத்தை தொடங்குகிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது