நயன்தாராவிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்கவில்லை! ‘சந்திரமுகி’ பட நிறுவனம் அதிரடி மறுப்பு!!
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோக்கள் அடங்கிய ஆவணப்படம், கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ‘நெட்பிளிக்ஸ்’ ஓடிடி தளதில் வெளியானது.இந்த ஆவணப்படத்தில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா நடித்த ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்காக, அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்ட நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இவ்வழக்கில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கில் தடை கோரும் மனு மீது ஜனவரி 8-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நயன்தாராவின் ஆவணப்படத்தில், ‘சந்திரமுகி’ படத்தின் சில காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாக கூறி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரடக்சன்ஸ் நடிகை நயன்தாராவுக்கும், ஓடிடி தளத்துக்கும் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு சந்திரமுகி பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாராவுக்கு எதிராக நாங்கள் எந்தவித புகாரும் அளிக்கவில்லை, நோட்டீசும் அனுப்பவில்லை. சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்த ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டோம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.