‘கராத்தே பாபு’ வாக மாறிய ரவிமோகன்!

ரவி மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான  ’காதலிக்க நேரமில்லை’ படத்தை தொடர்ந்து, ‘ஜெனி’, மற்றும் ‘எஸ்கே 25’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும்  நடித்து வருகிறார். இந்நிலையில் ரவி மோகன், ’டாடா’ பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 34 வது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டது.இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.‘கராத்தே பாபு’  என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டீசரில்,  சட்டமன்றத்தில் நடக்கும் ஒரு காட்சி இடம்பெறுள்ளது. அதில் எதிர்கட்சி தலைவராக வரும் கே.எஸ்.ரவிக்குமார் முதலமைச்சரைப் பார்த்து, அவர் எதற்கு என் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் பழைய பெயரைத் தெரிந்து கொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார், பெயரில் என்ன இருக்கிறது என கேள்வி எழுப்ப, அதற்கு முதலமைச்சராக வரும் நாசர், மெட்ராஸ் மாகாணம் தமிழ் நாடாக மாறியதற்கும்  தமிழ் நாடு தமிழகம் ஆகாமல் பாதுகாத்து கொள்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது என பெயருக்குப் பெரிய விளக்கம் கொடுக்கிறார். தொடர்ந்து சட்டமன்றத்தின் தீர்மானங்களை கே எஸ் ரவிகுமார் உள்ளிட்ட எம்எல் ஏக்கள்  கிழித்து எறிந்து அமளியில்  இறங்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து  எம்எல்ஏ வாக வரும் ரவி மோகன், முதலமைச்சர் என்னுடைய பழைய பெயரை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில் மகிழ்ச்சி என சொல்லி, “உங்கள் அனைவருக்கும் என்னை சண்முக பாபுவாகத் தான் தெரியும். ஆனால் எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. 17வருடங்களுக்கு முன் ஆர்.கே.நகர் மக்களால் கொடுக்கப்பட்ட பெயர் அது” எனக் கூறி முடிக்க, படத்தின் தலைப்பு ‘கராத்தே பாபு’ என விரிகிறது. நடப்பு அரசியலையும் குறிவைக்கும்  பரபரப்பான  அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.