‘ரிங் ரிங்’ – விமர்சனம்!
விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா ஆகியோரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், ரிங் ரிங். எழுதி இயக்கியுள்ளார் சக்திவேல்.
ஒளிப்பதிவு – பிரசாந்த் டி எஃப் டெக், இசை – வசந்த் இசைப்பேட்டை, எடிட்டிங் – பிகே , கலை இயக்கம் – தினேஷ் மோகன், பாடல்கள் – பா. ஹரிஹரன்,தயாரிப்பு – ஜெகன் நாராயணன்.
விவேக் பிரசன்னா – ஸ்வயம் சித்தா,டேனியல் அன்னி போப் – ஜமுனா , பிரவீன் ராஜா – சாக்ஷிஅகர்வால், அர்ஜுனன் – சஹானா ஆகிய ஜோடிகளும் சக நண்பனின் ஒரு பார்ட்டியில் ஒன்று கூடுகின்றனர். நண்பர்கள், எப்போதும் போல் கேலியும், கிண்டலுமாக ஜாலியாக இருக்கின்றனர். அப்போது அவர்களுக்குள் ஒரு சர்ச்சை உருவாகிறது. அதாவது ஒவ்வொருவரின் செல்போனுக்கு வரும் கால்ஸ், மெஸேஜ் என் அனைத்தையும் எல்லோருக்கும் தெரிய படுத்த வேண்டும். அப்படி இருக்கையில், அவர்களது செல்போனில் வரும் கால்ஸ், மெஸேஜ் அனைத்தும் அவர்களது அந்தரங்கத்தினை வெளிப்படுத்துகிறது. அதன் மூலம் பிரச்சனைகளும் உருவாகிறது. இதன் பிறகு ஜோடிகள் பிரியும் சூழ்நிலைகளும் உருவாகிறது அப்படி என்ன நடந்த்து என்பது தான் ரிங் ரிங் படத்தின் கதை.
படத்தில் தியாகு பாத்திரத்தில் விவேக் பிரசன்னா, பூஜாவாக சாக்ஷி அகர்வால், கதிராக டேனியல்,சிவாவாக பிரவீன் ராஜா, அர்ஜுனாக அர்ஜுனன்,சுயமாக ஸ்வயம் சித்தா, இந்துவாக சஹானா, ஜமுனாவாக ஜமுனா என நடித்திருக்கிறார்கள்.
இவர்களில், குறிப்பாக விவேக் பிரசன்னா – ஸ்வயம் ஜோடி நிறைய நடிப்பு தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இயல்பான நடிப்பால் அந்த இணை முதலிடம் பெறுகிறது.சில இடங்களில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தும் உள்ளனர்.
மற்ற பெண்களுக்கு புரொபோஸ் செய்து, தன்னுடைய காதலியிடம் மாட்டிக் கொள்ளும் போது ‘போதையில் செஞ்சிட்டேன்.’ என்று விழி பிதுங்கி சமாளித்து உளறும் டேனியல் நடிப்பு கலகலப்பினை ஏற்படுத்துகிறது.
பிரவீன் ராஜா – சாக்ஷி அகர்வாலுக்குள் நடக்கும் உரையாடலும், அவர்களுக்குள் விழும் சந்தேக முடிச்சு அவிழ்வதும் நல்லதொரு உணர்வு வெளிப்பாடுகள்.அர்ஜுனன் – சஹானா இருவருக்குள் நிலவும் புரிதலின்மையின் வெளிப்பாடுகளை நன்றாகவே நடிப்பில் காட்டியுள்ளனர்.குறிப்பாக அர்ஜுனன் அதிகம் பேசாமலே விழிகளாலே உணர்வுகளைக் கடத்தி உள்ளார்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வழியே வெளிப்பட்டுள்ளன.திரைக்கதையின் சுவாரஸ்யத்தால் பெரிதாக வெளிப்புறக் காட்சிகளுக்கு அவசியம் இல்லையென்று இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால் அதுவே ஒரு கட்டத்தில் தொலைக்காட்சித் தொடர்களின் உரையாடல் போல ஒரு தோற்றத்தைத் தருகிறது.
ஒளிப்பதிவாளர் பிரசாத், ஒரே லொகேஷனில் நடக்கும் காட்சிகளை அழகாக எடுத்துள்ளவர், கதாபாத்திரங்களின் உணர்வுகளை அழகாக படம்பிடித்துள்ளார்.
இசையமைப்பாளர் வசந்த்தின் பின்னணி இசை, காட்சிகளுக்கு அழுத்தம் சேர்த்துள்ளது.
மனிதர்களுக்குள் நடந்து வரும் அந்தரங்கங்களை அமபல படுத்துவதில் முன்னிலையில் இருக்கும் செல்போனினால் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. அதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை பொறுத்தே சுகமும், துக்கமும் தொடரும்.
படத்தின் இறுதியில், இயக்குநர் சக்திவேல் அனைத்து கதாபாத்திரங்களையும் பாஸிட்டிவாக அமைத்திருப்பது சிறப்பு.