அஜித்குமார், த்ரிஷா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர். அசர்பைஜான் நாட்டில் வசித்து வரும் நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, இருவரும் சுமூகமாக பிரிய முடிவு செய்கின்றனர். அதன்படி த்ரிஷாவை அவரது வீட்டிற்கு காரில் அழைத்து செல்கிறார், அஜித்குமார். ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கார் பழுதடைந்து விடுகிறது. அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த டிரக் டிரைவர் அர்ஜூன் அவரது மனைவி ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் உதவி செய்கின்றனர். அதன் பிறகு, கார் பழுது சரியான நிலையில் த்ரிஷாவை தேடி வரும் அஜித்குமாருக்கு த்ரிஷா கடத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. யார்? எதற்கா, கடத்தினார்கள். அஜித், மனைவி திரிஷாவை காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே ‘விடாமுயற்சி’.
அஜித் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டவர், இந்த மாதிரியான படங்களில் நடிப்பதற்கு தைரியம் வேண்டும். அவர் அதை செய்திருக்கிறார். நான்குவிதமான தோற்றங்களில் வந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். நடனம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் தனித்து நின்று, தனது வழக்கமான ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தியிருக்கிறார்.
திரிஷா, இளமை அழகு. காதல் கணவனை பிரிவது, தனக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதை கணவனிடம் தெரிவிப்பது என, கதாபாத்திரம் இருந்தாலும் அழுத்தமான நடிப்பினை அவர் வெளிப்படுத்தவில்லை! அது ஏமாற்றம்!
டிரக் டிரைவராக அர்ஜூன். அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே யூகிக்க முடிவதால் சுவாரசியம் சற்றுக்குறைவு. இடைவேளைக்கு பிறகு ரசிகர்களை அசத்திவிடுகிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
அர்ஜூன் மனைவியாக ரெஜினா கசாண்ட்ரா. அழுத்தமான கதாபாத்திரம் அதை குறைவில்லாமல் செய்திருக்கிறார். கிடைத்த வாய்ப்பினை அழகாக பயண்படுத்தி ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார்.
அஜித்தை புரட்டி எடுக்கும் இன்னொரு வில்லனாக ஆரவ். நன்றாகவே நடித்திருக்கிறார். மற்றபடி, ரம்யா சுப்பிரமணியம், ரவி ராகவேந்திரா, நிகில் சஜித், சஞ்சய் கணேஷ் சரவணன் ஆகியோரும், தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். இவரது ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். காட்சிகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார்.
ஆச்சர்யம், அனிருத்தின் இசை. பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்றபடி இருக்கிறது. பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.
படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த். படத்தை தொய்வில்லாமல், காட்சிகளை கச்சிதமாக தொகுத்திருக்கிறார்.
சுப்ரீம் சுந்தர் அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் உயிரோட்டமாக இருக்கிறது. குறிப்பாக காருக்குள் நடக்கும் சண்டைக்காட்சி, நேர்த்தி.
இயக்குநர் மகிழ் திருமேனி, ஒரு கடத்தல் சம்பவத்தை, பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை மூலம் சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். யூகிக்க முடிந்த காட்சிகளாக இருந்தாலும், திரைக்கதை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது. மற்ற படி, விடாமுயற்சி ஒரு பரபரப்பான, பார்க்கக்கூடிய ஆக்ஷன் டிராமா!