சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவமே ‘ராபர்’ !

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின்  பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.
இப்படத்தின் கதை என்ன?
பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன்.சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன.மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று  ஆசைப்படுகிறான்.
ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும் உணராது .நாயகன் தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருக்கவே குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறான்.’உலக மக்களின் துன்பங்களுக்குக் காரணம் ஆசையே’ என்றார் புத்தர்.’நிலத்தில் விளையும் களைகள் பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள் மனிதனின் குண நலன்களைப் பாதிக்கின்றன’ என்கிறது தம்மபதம்.
நாயகனின்  ஆசை பேராசையாகி வெறியாக மாறுகிறது. அவனது குறுக்கு வழி திருட்டு வழியாக மாறுகிறது. ஆம்.அவன் திருட்டுத் தொழிலில் இறங்குகிறான்.
நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே  ‘ராபர்’படத்தின் கதை.
இப்படத்தின் கதை, திரைக்கதையை ‘மெட்ரோ’ , ‘கோடியில் ஒருவன்’ படங்களின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
 ‘ராபர்’ படத்தை தனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் எஸ் .கவிதா தயாரித்துள்ளார். இந்த’ ராபர்’ திரைப் படத்தின்’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ‘எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு உதவினார்..இப்போது இந்த படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது . 
இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே ‘மெட்ரோ’ படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர். இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.இப்படத்திற்கு  என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.இந்த படத்தில் ஆர்வமுள்ள திறமைக் கரங்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு எஸ். எம். பாண்டி படத்தை இயக்கி உள்ளார்.
ராபர்  படம் மார்ச் மாதம் வெளியிட அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன..