விநியோகஸ்தர், தயாரிப்பாளர் JSK சதீஷ் இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம், ஃபயர். வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது.
ஃபயர் படத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், சிங்கம்புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஃபயர் திரைப்படம் வெளியாகும் முன்னரே திரைத்துரையினருக்கும், சில அமைப்புகள் உள்ளிட்ட பலருக்கும், படத்தின் மேல் உள்ள அதீத நம்பிக்கையினால் திரையிட்டு வருகிறார், JSK சதீஷ். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் அதிகமாகியிருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை, ஃபயர் படம் பூர்த்தி செய்திருக்கிறதா? பார்க்கலாம்.
ஃபயர் திரைப்படம், நாகர்கோவில் ‘காசி’ என்ற கொடூரனை நினைவூட்டுவது போல் இருக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், பாலாஜி முருகதாஸ்.
பிசியோதெரபி டாக்டரான பாலாஜி முருகதாஸ், திட்டமிட்டு திருமணமான, ஆகாத பல பெண்களை காதலித்து, ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டுகிறார். அப்படி அவரது வலையில் சிக்கும் பல பெண்களை அரசியல் வாதிகளுக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கும் அனுப்பி வருகிறார். இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அவரை கொன்றது யார்? என்பதை துப்பு துலக்கும் போலீஸ் அதிகாரி JSK சதீஷ், அவரை கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதே ‘ஃபயர்’ படத்தின் “அமெச்சூர்’’ கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
ஃபயர் என்ற திரைப்படத் தலைப்பிலேயே, இயக்குநர் JSK சதீஷின் வணிக நோக்கம் புரிந்து விடுகிறது. அவர், திரைப்படத்தினை முழுக்க, முழுக்க சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான் ஆகிய, நடிகைகளின் சதைக் கவர்ச்சியை நம்பி உருவாக்கியிருக்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளையும், பாதுகாப்பினையும் பேசவில்லை. மாறாக, ஆபாசம்… ஆபாசம்… மட்டுமே பேசப்பட்டிருக்கிறது. ஆபாச காட்சிகளை மட்டுமே நம்பி மொத்த திரைக்கதையும் நகர்கிறது.
‘காசி’ என்ற கதாபாத்திரத்தில், ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளார்,பாலாஜி முருகதாஸ். அமைச்சராக சிங்கம் புலி, போலீசாக சுரேஷ் சக்கரவர்த்தி. உள்ளிட்ட பலரும் அமெச்சூர் தனமான நடிப்பினால் ரசிகர்களிடமிருந்து தள்ளி நிற்கின்றனர்.
சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான் உள்ளிட்டவர்களில் சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி இருவரும் தனிக்கவனம் பெறுகின்றனர்.
ஃபயர் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ், கொலை காரனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவரது தோற்றமும், உடல் மொழியும் கதாபாத்திற்கு எந்த வகையிலும் உதவவில்லை! இயக்குநராகவும் பெரிதாக ஈர்க்கவில்லை!
பெண்களுக்கு எதிரான அநீதிகளையும், பாதுகாப்பினையும் பேசவேண்டிய படம். ஆபாச காட்சிகளால் ததும்பி நிற்கிறது!
‘ஃபயர்’ – அமெச்சூர் அட்டெம்ப்ட்!