‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா-  பா. ரஞ்சித் – அஸ்வத் மாரிமுத்து – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். உரையாடல்களை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ் எஸ் மூர்த்தி வடிவமைக்க, அதிரடியான சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 
இதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் தமிழ் திரையுலகத்தின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில், ” 
‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்டத்தினை பார்க்கும் போது ஜீ.வி. பிரகாஷ் குமாரின் கடும் உழைப்பு தெரிகிறது. இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கமல் பிரகாசுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 
சினிமா மீது பேரார்வம் கொண்டிருக்கும் தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள இளம் தலைமுறையினரை கண்டறிந்து அவர்களுக்கு அறக்கட்டளை மூலம் சினிமாவின் அனைத்து நுட்பங்களையும் கற்பித்து படைப்பாளிகளாக உருவாக்கும் உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.  
இசைஞானி இளையராஜா , இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோருக்கு பிறகு பின்னணி இசையில் ஜீ வி பிரகாஷ் குமாரின் திறமை பளிச்சிடுகிறது. ‘அசுரன்’ படத்தினை தயாரித்தேன். அந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்தபோது அப்படத்தில் நடித்த வெங்கடேஷ், தமிழ் ‘அசுரன்’ திரைப்படத்தின் பின்னணி இசை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார். அதனை ஜீ.வி பிரகாஷிடமும், வெற்றி மாறனிடமும் சொன்ன போது எந்தவித தயக்கமில்லாமல் உடனே பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தனர். ஜீ வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசையால் அந்தப் படம் தெலுங்கிலும் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ராசா’ பாடல் ஹிட் ஆகும். 
வெற்றிமாறனிடம் பேரலல் யுனிவர்ஸ் என்றால் என்ன? என கேட்டேன். எது உச்சமோ அதற்கு நிகரானது என பதிலளித்தார். அந்த வகையில் இந்த நிறுவனம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்த நிறுவனம் புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து வாய்ப்பு கொடுத்து தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்றார். 
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”  ஜீ.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இதுதான் அவரின் சிறப்பான அடையாளம்.  எந்த இயக்குநர்.. எந்த தருணத்தில் ..அவரை சந்திக்க வேண்டும் என்று அவரை தொடர்பு கொண்டாலும், உடனடியாக தொடர்பு கொண்டு சரியான பதிலை சொல்வார். அவர் பணி செய்வதற்கு ஒருபோதும் மறுப்பு சொன்னதே இல்லை. இது அவருடைய தனித்திறமை என்றே சொல்லலாம். 
பத்தாண்டு காலம் இசையமைப்பாளராக பணியாற்றிய பிறகு அவர் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது நான் இசை பணி நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது எதற்கு திடீரென்று நடிப்பு ? என்று கேட்டேன். ஒரே அறையில் இருந்து பணியாற்றுவது சோர்வை தருகிறது. நான் வெளியில் வந்து பணி செய்ய விரும்புகிறேன் என்றார். 
ஆனால் அவர் நடிக்க வந்த பிறகு அவருடைய இசை திறமை மேலும் விரிவடைந்தது. அவரே நடிகராக மாறிப் போனதால் தன்னுடைய இசையை அவரால் எளிதாக மேம்படுத்தி கொள்ள முடிந்தது. அத்துடன் மட்டுமல்லாமல் அவர் கற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார். இந்தப் படத்திலும் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும், தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். 
சிறிது நாள் முன் ஒரு நாள் திடீரென்று போன் செய்து நான் தயாரிப்பாளராக போகிறேன் என்றார். வாழ்த்து சொல்லிவிட்டு யார் இயக்குநர் ? என்று கேட்டேன். புது இயக்குநர்.‌ ஸீ ஃபேண்டஸி ஜானர் படம்… இந்தியாவில் இதுதான் ஃபர்ஸ்ட் என உற்சாகம் குறையாமல் சொன்னார்.  இந்தப் படத்தின் மீது அவர் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார். 
இந்த படத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அரங்கத்தை பார்வையிட சென்று இருந்தேன். அந்த அரங்கம் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தியது. கடல் அலை, படகு, மழை, பனி.. அதன் இயக்கம் பற்றி தொழில்நுட்ப ரீதியாக விவரித்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு என் மனதில் ஒரு கணக்கை போட்டு பட்ஜெட் எவ்வளவு? என்று கேட்டேன். நான் எதிர்பார்த்த பட்ஜெட்டில் 10%  தான் இதன் பட்ஜெட் என்று சொன்னார்கள்.  உண்மையில் அதிசயித்தேன். சின்ன பட்ஜெட்டில் பிரம்மாண்டமான அரங்கம். இதற்காகவே உழைத்த அனைவருக்கும் நன்றி. 
நடிகர்கள் குறிப்பிட்டது போல் இந்த  பிரம்மாண்டமான அரங்கத்தில் நடிப்பது கடினம் தான். சவாலானது தான். அவர்களின் கடின உழைப்பு ..திரையில் ரசிக்கும் வகையில் இருக்கிறது.  
இந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வழங்கிய ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கும், அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழும் இயக்குநருக்கும் வாழ்த்துக்கள்.  
இது அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியிலான படைப்பு. தொழில்நுட்பக் கலைஞர்கள் நேர்த்தியாக உழைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் கமர்சியல் வெற்றி ஜீ வி பிரகாஷ் குமார் போன்ற சினிமா மீது ஆர்வமுள்ள தயாரிப்பாளருக்கு மேலும் பல தயாரிப்புகளை உருவாக்குவதற்கு உதவும். ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 
தயாரிப்பாளர்- இசையமைப்பாளர் -நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ” இயக்குநர் வெற்றிமாறன் நம்முடைய வீட்டில் இருக்கும் அம்மா போன்றவர்.‌ அம்மா எப்போதும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை செய்து கொண்டு இருப்பார்.
அதன் பிறகு அவர்கள் தான் வழி காட்டுவார்கள். நான் நடிக்கிறேன் என்று சொன்னவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தாலும்.. அதன் பிறகு நடிப்பு பயிற்சிக்காக என்னை அனுப்பி வைத்ததும் வெற்றி மாறன் தான். 18 வருடங்களாக அவரும் நானும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். 
‘தெறி’, ‘அசுரன்’ என இரண்டு படங்கள் தாணு சார் தயாரிப்பில் பணியாற்றி இருக்கிறேன். இரண்டுமே வெற்றி. அதனால் அவர் எனக்கு ராசியான தயாரிப்பாளர். தற்போது ‘வாடிவாசல் ‘ படத்திலும் இணைந்திருக்கிறோம். 
இயக்குநர் சுதா கொங்காரா – அவர்களும் எனக்கு 20 ஆண்டுகால நண்பர் தான். அவர்கள் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தபோது ..நான் ஏ ஆர் ரகுமானிடம் உதவியாளராக இருந்தேன். அவர்களுக்கு மேடை பயம் இருக்கிறது எப்போதும் மேடைக்கு வருகை தர மாட்டார். என்னுடைய அழைப்பிற்காக இங்கு வருகை தந்தார். அவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா ரஞ்சித்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில்  நடித்திருக்கிறேன். ‘தங்கலான்’ திரைப்படத்திற்கு இசையமைத்தேன். அது ஒரு மறக்க இயலாத அனுபவம். அவர் தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக உயர்த்துகிறார். அதனால் அவருடன் இணைந்து பணியாற்றும்போதெல்லாம் எனக்கும் புதிய உற்சாகம் பிறக்கும். 
படப்பிடிப்பு தளத்தில் நடிகை திவ்யா பாரதி நடிக்கும் போது மட்டும் எந்த ஒரு திருத்தத்தையும் இயக்குநர் கமல் சொல்ல மாட்டார். இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதன் பிறகு தான் அவருடைய மனைவி பெயரும் திவ்யபாரதி என்று தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் அவர் அவருடைய மனைவி மீது வைத்திருக்கும் அன்பை தெரிந்து கொண்டேன். 
இது ஒரு பெரிய கனவு தான். ஹாலிவுட் வெளியாகும் ஹாரி பாட்டர் போன்ற படங்களை பார்க்கிறோம். இதுபோல் ஏன் நம்மளால் உருவாக்க முடியாது என யோசிப்பேன். அவர்கள் அவர்களுடைய பாட்டி கதையை எடுக்கும் போது நாம் நம்முடைய பாட்டி கதையை எடுக்கலாமே என யோசித்தோம். நம்ம ஊரு பாட்டி கதை போன்ற கதை தான் கிங்ஸ்டன். 
ஒரு ஃபேண்டஸி. அதை நம்முடைய  கதைக்களத்திலிருந்து சொல்ல வேண்டும். அதாவது நம்ம ஊரு ஹாரி பாட்டர் எப்படி இருப்பார்? இதுபோன்ற எண்ணங்களை கமல் ..என்னிடம் கதையாக சொன்ன போது எனக்குள் ஏற்பட்டது. 
இந்த திரைப்படத்தில் ஜீ ஸ்டுடியோ இணைந்தது. அவர்கள் முழு ஆதரவை வழங்கினார்கள். இதற்காக இந்த தருணத்தில் அக்சய் மற்றும் வினோத் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் கனவில் அவர்களும் ஒரு பகுதியாக இணைந்திருக்கிறார்கள். 
இந்தப் படத்தின் முதல் காட்சியை இயக்கி கொடுத்த கமல்ஹாசனுக்கும் நன்றி. அவரிடம் சென்று நான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கும் முதல் படத்தின் முதல் காட்சியை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னேன். அவரும் எந்தவித மறுப்பும் செல்லாமல் உடனடியாக வந்து இயக்கி தந்தார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
மேலும் இந்தப் படத்திற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஜீ ஸ்டுடியோஸ், வி எஃப் எக்ஸ் டீம், திலீப் சுப்பராயன், நீரவ் ஷா, கோகுல் பினோய், எஸ். எஸ். மூர்த்தி, ஷான் லோகேஷ், பூர்ணிமா, பாடலாசிரியர்கள், நடன இயக்குநர்கள், கோபி பிரசன்னா, சிங்க் சினிமா, சரிகம , அழகம் பெருமாள், சேத்தன், குமரவேல், சபுமோன், ஆண்டனி, அருண், ராஜேஷ், திவ்யபாரதி, யுவராஜ், தீவிக், வெங்கட் ஆறுமுகம், தினேஷ் குணா, கமல் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
என்றார்.