கருணாகரன், கிளி ஜோசியம் பார்ப்பவர். இவர், அடுத்து என்ன நடக்க போகும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவர். மணிகண்டன், பெண்பித்தர். ஸ்ரீநாத், தங்கையின் மேல் அளவிட முடியாத அன்பு வைத்திருப்பவர். ஆவிகளை தனது கண்களால் பார்க்கக்கூடிய சக்தி படைத்தவர். இவரது தொழில் பேய் ஓட்டுவது. ரமேஷ் திலக், பல குரலில் பேசக்கூடிய திறமை படைத்தவர். வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட இவர்கள் நால்வருக்கும், ரோட்டில் கிடந்த 2000 ரூபாய் மூலம் நட்பு உருவாகிறது. அதே போல், இவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ‘லெக் பீஸ்’ படத்தின் காமெடிக் கதை.
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார், எஸ்.ஏ.பத்மநாபன். இயக்கியிருக்கிறார், ஶ்ரீநாத்.
கீழே கிடந்த 2000 ரூபாயை எடுத்துக்கொண்டு கருணாகரன், மணிகண்டன், ஸ்ரீநாத், ரமேஷ் திலக் நான்கு பேரும், மொட்டை ராஜேந்திரன் நடத்தி வரும் சாராயக்கடைக்கு செல்கின்றனர். பாரின் மேனேஜரான யோகிபாபுவுக்கும், இவர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. இந்த இடத்தில் தொடங்கும் நகைச்சுவை, படம் முழுவதும் தொடர்கிறது.
‘குயில்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிகண்டன், படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சி அல்ட்டிமேட்! குயில்’ க்கான பெயர்க் காரணம், பலே!
‘லெக் பீஸ்’ படத்தை இயக்கியிருக்கும் ஶ்ரீநாத், தங்கையிடம் பாசம் காட்டுவதிலும், ரவி மரியாவை கட்டி வைத்து, அடித்து வெளுக்கும் காட்சியிலும், குறிப்பிடும் படி நடித்துள்ளார்.
கிளி ஜோசியராக நடித்திருக்கும் கருணாகரன், தன் பங்கிற்கு என்ன முடியுமோ, அதை செய்திருக்கிறார். டீசன்ட்டான நடிப்பு.
ரமேஷ் திலக், அவ்வளவு வறுமையிலும், பசியிலும் நேர்மை தவறாத மனிதனாக நடித்து ரசிகர்களின் மனம் கவருகிறார்.
வில்லன்களாக வரும், மதுசூதன்ராவ், ரவிமரியா இருவரும் இயக்குநரின் இயக்குநரின் விருப்பப்படி நடித்துள்ளனர்.
சாராயக்கடை நடத்துபவராக மொட்டை ராஜேந்திரன், வழக்கமான நடிப்பினை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
யோகி பாபு, தனது வழக்கமான பாணியின் மூலம் சிரிக்க வைக்கிறார். இவரும், இவருடைய மனைவியாக நடித்திருப்பவரும் பேசும் வசனங்கள் ஆபாசக் காமடிகள்.
விடிவி கணேஷ், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து என அனைவரும் தங்களது பங்கினை கொடுத்து, திரைக் கதையை நகர்த்திச் செல்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் மாசாணியின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் பிஜோர்ன் சுர்ராவின் இசையும், படத்தின் பலம்.
படத்தொகுப்பாளர் இளையராஜா.எஸ், பாராட்டுக்குரியவர்.
இயக்குநர் ஸ்ரீநாத், ஏகப்பட்ட நடிகர்களைக் கொண்ட க்ரைம் கதையை, நகைச்சுவையான திரைக்கதை மூலம் சுவாரசியப் படுத்தியிருக்கிறார். இளைஞர்களுக்கான குத்து பாடல்கள் ஜோர்! அனிரூத், ஒரு குத்து பாடலை பாடி, ஆட்டம் போட வைக்கிறார்.
முதல் பாதியில் சற்று தடுமாற்றம் இருந்தாலும் அது பின்னர் சரியாகிவிடுகிறது.
மொத்தத்தில், ‘லெக் பீஸ்’ அடல்ட் காமெடி வகையிலான, க்ரைம் படம்.