விவேக் பிரசன்னா, சாந்தினி திருமணமான தம்பதிகள். வருடங்கள் பல கடந்த நிலையில், சாந்தினி கர்ப்பமடைகிறார். இருவரும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்கின்றனர். சில நாட்கள் சென்ற நிலையில், சாந்தினிக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, அவருடைய குழந்தைக்கு, விவேக் பிரசன்னா அப்பா இல்லை, என்கிறார். அதோடு சாந்தினியின் படுக்கை அறை வீடியோவையும் அனுப்பி வைக்கிறார். இதனால், விவேக் பிரசன்னா, சாந்தினி இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘ட்ராமா’.
விவேக் பிரசன்னா, கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். அவர் நடிப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது. அதை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, குழந்தையின்மை பிரச்சனை குறித்து, நண்பனிடம் சொல்லும் காட்சியில் சிறப்பா நடித்திருக்கிறார்.
சாந்தினி, நாயகியாக நடித்திருக்கிறார். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்களின் மன நிலையையும், கர்ப்பமான பிறகு அடையும் மன நிலையையும், உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தி, சிறப்பாக நடித்திருக்கிறார்.
பிரதோஷ், அவரது காதலியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி, விவேக் பிரசன்னாவின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சஞ்ஜீவ், மாரிமுத்து, பிரதீப் கே.விஜயன், ரமா போன்றோரும் கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்துள்ளனர். இவர்களில், பூர்ணிமா ரவி சிறப்பு கவனம் ஈர்க்கிறார்.
இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் இசையில் ஒரு டூயட் பாடல் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு சிறப்பு.
ஒரு கதை. அதை பிரிக்கும் மூன்று விதமான திரைக்கதைகளோடு, மர்மமான முறையில் க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருக்கிறார், எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை மாரியப்பன். வில்லனை எளிதாக யூகித்து கொள்ள முடிவது பலவீனம். அதோடு, இப்படியெல்லாம் நடக்குமா? என கேள்வி எழுவதும் படத்தின் குறை. இவைகளை பரபரப்பாக செல்லும் திரைக்கதை மறக்கச் செய்து விடுகிறது.
‘ட்ராமா’ – பார்க்கலாம்!