திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா, கர்நாடக மாநிலம் பிடதிக்குச் சென்று ஆசிரமம் அமைத்தார். பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவிய அவர், பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் தனிமையில் இருந்த அந்தரங்க வீடியோ வெளியானதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். பின்னர், பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பெங்களூரில் பாலியல் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார்.இந்நிலையில் கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்த நித்தியானந்தா, அங்கு இந்துக்களுக்கான நாடு என்றும், தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.இந்நிலையில், நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால், கைலாசாவில் இருந்து யாரும் அதை உறுதிப்படுத்தவில்லை. நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இது நித்தியானந்தாவின் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுயநினைவின்றி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்தத் தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் நித்தியானந்தா இறந்துவிட்டாரா? அல்லது போலீஸ் வழக்கில் இருந்து தப்பிப்பதற்கான நித்தியின் புதிய யுக்தி இதுவா? என்பது குறித்து மத்திய உளவு துறையினரும் போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்












