பேராண்மை, பரதேசி, கபாலி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய படம் ‘யோகிடா’. இப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார் கவுதம் கிருஷ்ணா. மலையாளத்தில் ‘லூசிஃபர்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தமிழில் ‘சாது மிரண்டா’ போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள தீபக் தேவ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தவசி,நரசிம்மா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்கே ஏ .பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார் .
இப்படத்தில் சாய்தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக இடமாற்றங்களை பெற்ற நேர்மையான காவல் ஆய்வாளராக நடிக்கிறார். தான் வேலை பார்க்கும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை அவரது குடும்பத்தார் தற்கொலை என மாற்ற முயற்சிக்கின்றனர். இருப்பினும் அதை கொலை என நிரூபித்து குற்றவாளியை கைது செய்கிறார் சாய் தன்ஷிகா. ஆனால் குற்றவாளியை விடுவிக்க சொல்லி பல தரப்பில் இருந்தும் அவருக்கு அழுத்தம் தரப்படுகிறது. அதற்கு மறுப்பதால், இதைவிட மோசமான பகுதிக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் மீண்டும் அவரை மாற்றி விடுகின்றனர்
அங்கு சாய் தன்ஷிகா சந்திக்கும் பல்வேறு திகைக்க வைக்கும் சம்பவங்களால், அவர் அனுபவிக்கும் பல்வேறு இன்னல்களை சமாளித்து வெற்றி பெற்றாரா? என்பதே யோகிடா.படத்தின் கதை என்கிறார் இயக்குனர் கவுதம் கிருஷ்ணா.