
சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றப்படுவது, சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம். இந்நூல், 63 சைவ அடியார்களான நாயன்மார்களின் வரலாறு, பக்தி, தொண்டின் சிறப்பு பற்றி விளக்குகிறது. இந்த 63 நாயன்மார்களுக்கும் தனித்தனி சிறப்பு உண்டு. இவர்களில் திண்ணனார் என்ற கண்ணப்பர் 6 நாட்களில் வழிபாடு செய்து சிவனருள் பெற்றவர். அது எப்படி என்று விளக்குவது தான், கண்ணப்ப புராணம்.
இதுவே விஷ்ணு மஞ்சு, பிரீத்தி முகுந்தன் நடிப்பினில் வெளிவந்திருக்கும் ‘கண்ணப்பா’ படத்தின் கதை.
கண்ணப்பா திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு, பிரீத்தி முகுந்தன், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் , பிரபாஸ், மோகன்லால், மோகன் பாபு, சரத்குமார், மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். ஸ்டீபன் தேவசி இசையமைத்துள்ளார். ‘ஏவிஏ என்டர்டைன்மென்ட்’, ‘24 ப்ரேம்ஸ் ஃபேக்டரி’ சார்பில், மோகன் பாபு தயாரித்துள்ளார்.
வேடர் குலத்தை சேர்ந்த திண்ணன், போர்க் கலைகளில் மிகுந்த திறமை வாய்ந்தவர். வேட்டையாடுவதில் சிறந்து விளங்குபவர். சிறுவயதில் தனது நண்பனை அம்மனுக்கு நரபலி கொடுத்ததால் கடவுள் மீது நம்பிக்கயற்றவனாக இருந்து வருகிறார். எல்லாக் கடவுள்களுமே பொய். அனைத்தும் வெறும் கற்சிலை என இருந்து வருகிறார். இப்படி இருந்தவர் கடவுள் மீது எப்படி நம்பிக்கை கொண்டார் என்பதும், உண்மையான பக்திக்கு எந்தவிதமான சம்பிரதாயங்களோ, அளவுகோளோ இல்லை என்பதை உணர்த்தும் படமே, கண்ணப்பா.
‘கண்ணப்ப நாயனார்’ கதையை, சில மாற்றங்களுடன் படமாக்கியிருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. மாற்றியமைக்கப்பட்டது சிலருக்கு தெரிந்தும், தெரியாமலும் இருக்கலாம். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிக்கும்படி இருக்கிறது. பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் காட்சிகள், பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
கண்ணப்ப நாயனாராக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு, கடவுள் மறுப்பவராகவும், ஆன்மீகத்தின் உணர்வு கண்டவுடன் அதில் திளைப்பவராகவும் நன்றாக நடித்திருக்கிறார். அவரது கட்டுக்கோப்பான உடல், போர்க்களக் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. ப்ரீத்தி முகுந்தனிடம் காதல் வயப்படும் காட்சிகளிலும் சிறப்பாகவே நடித்துள்ளார்.
கண்ணப்ப நாயனாரின் காதலியாகவும், மனைவியாகவும் நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் அழகு பதுமையாக வலம் வருகிறார். அவரது உடல் வனப்பும், கண்களும் எல்லோரையும் வசியம் செய்யும். கதாபாத்திரத்திற்கேற்றபடி நடிக்கவும், நடனமாடவும் செய்திருக்கிறார்.
சிவனை, ஆகம விதிப்படி வணங்கும் மகாதேவ சாஸ்திரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன் பாபு, தனது சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார்.
அதேபோல் கண்ணப்பாவின் அப்பாவாக நடித்திருக்கும் சரத்குமார், ‘கிராத்தா’ கதாபாத்திரத்தில் நடித்த மோகன்லால், சிவனாக நடித்த அக்ஷய் குமார், பார்வதியாக நடித்த காஜல் அகர்வால் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
விஷ்ணு மஞ்சு, மோகன் லாலுடனும் பிரபாஸுடனும் மோதும் சண்டைக்காட்சி சிறப்பாக இருக்கிறது.
ருத்ரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபாஸ், திரையில் தோன்றியவுடனே ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.
வாயு லிங்கத்தை அபகரிக்க நடக்கும் போர்க்களக்காட்சி, மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.
மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, பிரம்மானந்தம், ரகு பாபு, ஐஸ்வர்யா பாஸ்கரன், தேவராஜ், சிவ பாலாஜி, அர்பித் ரங்கா ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரும் பலமாக இருக்கிறது.
பாடல்களும் பிண்ணனி இசையும் சிறப்பு. ஸ்டீபன் தேவஸியின் இசையும் படத்துக்கு பெரும் பலம் தான்.
இயக்குநர் முகேஷ் குமார் சிங், ஆன்மீக பக்தர்கள் மெய் சிலிர்க்கும் வகையில் படமாக்கியிருக்கிறார்.
‘கண்ணப்பா’ – சிவனடியார்களை மெய்சிலிர்க்கச் செய்யும்!












