‘அந்த 7 நாட்கள்’ – (விமர்சனம்!) ஆபத்தான, கட்டுக்கதை!

அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் அஜித்தேஜ், ஸ்ரீ ஸ்வேதா இருவரும், நாயகன், நாயகியாக நடித்திருக்கின்றனர். அவர்களுடன் கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்ப்படத்தை, ‘பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ்’ சார்பில், முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ளார். இயக்குநர் கே பாக்யராஜின் உதவியாளர் எம்.சுந்தர் இயக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவினை கோபிநாத் துரை செய்திருக்க, சச்சின் சுந்தர் இசையமைத்திருக்கிறார்.
1981 ஆம் ஆண்டு, இந்தியாவின் திரைக்கதை மன்னன், என்றழைக்கப்படும் கே.பாக்யராஜின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம், அந்த 7 நாட்கள். அவர் இப்படத்தினை, சொற்ப அளவிலலான கதாபாத்திரங்களைக்கொண்டு, எளிதான திரைக்கதை மூலம் சிறப்பான ஒரு படத்தினை கொடுத்திருந்தார். இது பெரியாரிஸ்ட்டுகளுக்கும், வேறு சிலருக்கும் விவாதப்பொருளாக ஆனது. அதே பெயரில் தற்போது வந்திருக்கும் இப்படத்திற்கு சற்றே எதிர்பார்ப்பு! எப்படியிருக்கிறது, பார்க்கலாம்.
அரசியல்வாதி நமோ நாராயணனின் ஒரே மகன், அஜித்தேஜ். அவர், ஒரு அஸ்ட்ரானமி (Astronomy) ஸ்டூடண்ட். ஒரு நாள் சூரிய கிரகணத்தை ஆராய்ச்சி செய்யும்போது, அஜித்தேஜ்ஜுக்கு ஒருவிதமான அமானுஷ்ய சக்தி கிடைக்கிறது. அதாவது, விலங்கு மற்றும் மனிதர்களை அவர் உற்று நோக்கும் போது, அவர்களின் மரணத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில், அஜித்தேஜ் தன் வீட்டின் எதிரே வசிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள் , ஸ்ரீ ஸ்வேதாவை கண்டவுடன் காதல் கொள்கிறார். நாளடைவில், இருவரும் நெருங்கி பழகி வருகின்றனர். இது இரு வீட்டினருக்கும் தெரிய வர, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஸ்ரீ ஸ்வேதாவின் முறைப்பையன், அஜித்தேஜை அடித்து ஆற்றில் போட்டுவிடுகிறார். இதை அறிந்த ஸ்ரீ ஸ்வேதா, தற்கொலை செய்கிறார். அதிர்ஷட வசமாக இருவரும் உயிர் பிழைக்கின்றனர்.
அதன் பிறகு அஜித்தேஜ், ஸ்ரீ ஸ்வேதா இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போய் கொடைக்காணலில் பதுங்குகின்றனர். 7 நாட்களில் இறக்கப்போகும் ஸ்ரீ ஸ்வேதாவை அஜித்தேஜ்ஜால் காப்பாற்ற முடிந்ததா, இல்லையா? என்பது தான், ‘அந்த 7 நாட்கள்’ திரைப்படத்தின் மீதிக் கதை.
பொதுவாக கிரகணங்கள் பற்றிய கட்டுக்கதைகள் நிறைய உண்டு. அதை, இத்திரைப்படத்தின் இயக்குநர் எம்.சுந்தர் சாமார்த்தியமாக பயன்படுத்தியுள்ளார். ஆனால், அதில் தெளிவில்லை. காதல், அமானுஷ்யம், நாய்க்கடி இவைகளை ஒன்றினைத்து ஒரு கதையை முடிந்தவரை சுவாரசியமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். வழக்கமான, காதலர்கள் பெண்ணின் முறைமாமனிடமிருந்து தப்பிக்கும் கதையாக செல்கிறது. க்ளைமாக்ஸில், பார்வையாளர்களை சற்று தலை நிமிரச்செய்கிறது.
அஜித்தேஜ் தோற்றமும், நடிப்பும் அவரின் கதாப்பாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறது. நாயகி ஸ்ரீ ஸ்வேதா பின்னால் சுற்றும் போதும், க்ளைமாக்ஸில் அவரை காப்பாற்ற போரடும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகி ஸ்ரீ ஸ்வேதாவிற்கு க்ளைமாக்ஸ் காட்சிகளே கை கொடுத்துள்ளது.
அரசியல் பலமிக்க அமைச்சராக நடித்திருக்கும் கே. பாக்யராஜ், கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கும் நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன் உள்ளிட்டோரும் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்துள்ளனர்.
கிரகணங்கள் பற்றிய கட்டுக்கதைகள் எப்படி உலவி வருகிறதோ, அதேபோல், ‘வெறிநாய்க்கடி நோய்க்கு’ நாட்டுமருத்துவத்தில் மருந்திருப்பதாகவும், அது, சாகும் தருவாயில் இருக்கும் ஒருவரை காப்பாற்றும் என்றும் க்ளைமாக்ஸ் மூலம், தனது கட்டுக்கதையை அவிழ்த்து விட்டிருக்கிறார், இயக்குநர் எம்.சுந்தர்.
‘அந்த 7 நாட்கள்’ – ஆபத்தான, கட்டுக்கதை!