மதுரை ‘கிடா’ சண்டையை மையப்படுத்தி உருவான ‘ஜாக்கி’!
பிகே 7 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்துக்கு “ஜாக்கி” என பெயரிடப்பட்டுள்ளது.கிடா சண்டையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக மண் சாலை பந்தயத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட’மட்டி’படத்தை இயக்கிய டாக்டர் பிரகபல் எழுதி இயக்கியுள்ளார் .
இப்படம் குறித்து இயக்குனர் டாக்டர். பிரகபல் கூறுகையில்,” ‘மட்டி’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக, அதைவிட சுவாரஸ்யமான ஒரு கதையை தேடி இந்தியா முழுவதும் நிறைய பயணப்பட்டேன்.அப்படி மதுரைக்கு செல்லும்போது நான் கிடா சண்டை பந்தயத்தை நேரில் பார்த்தேன். அந்த பந்தையத்தை பார்க்கும் போதே, அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த கிடா சண்டைக்குள் ஒரு வாழ்வியலும், அது மட்டுமின்றி உணர்வு நிலையில் கிடாவிற்கும் அதன் கட்டாரிக்கும் ஒரு பிணைப்பு இருப்பதை கவனித்தேன்.
கிடா சண்டை தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி போன ஒரு விளையாட்டு என்று கண்டறிந்தேன். அது சம்பந்தமான நிறைய தரவுகளை சேகரிக்க தொடங்கினேன்.

இந்த மாதிரி சண்டை கிடாக்களை வளர்ப்பதற்காக அவர்களுடைய ‘ஐ.டி’. வேலைகளை கூட விட்டுவிட்டு, சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிறைய இளைஞர்கள் சந்தித்தது எனக்குள் பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது. என்னுடைய முதல் படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணா மற்றும் ரிதன் கிருஷ்ணாவிடம் . இந்த கதையை பற்றி சொன்னவுடன், அவர்கள் மதுரை வந்து, தங்கி, கிடாக்களுடனும், கிடா கட்டாரிகளுடனும் பழகி, அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.
கொஞ்சம், கொஞ்சமாக மதுரை மக்களோடு, மக்களாக மாற்றினேன். இப்படியாக ஒருபக்கம் கிடாக்களுடனும் , மறுபக்கம் மதுரை மக்களுடனும் பழக வைத்து, அவர்களை மதுரை தன்மைக்குள் கொண்டுவர எனக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது. அதற்கு பிறகுதான் கிடாக்களும், இவர்களின் குரலை கேட்டவுடனே ஓடி வருவது, தாவி குதிப்பது என சொல்வதை எல்லாம் கேட்கத் துவங்கியது.உடனே அந்த ஊரில் நடந்த உண்மையான கிடா சண்டை பந்தயத்தில் கதாநாயகன் யுவன் கிருஷ்ணாவையும், அவருடைய கிடாவையும் போட்டியிட வைத்தேன்.
அந்த பந்தயத்தில் அவர்கள் இருவரும் முதல் பரிசான பதக்கத்தை வென்று வந்தார்கள். அந்த பந்தயத்தின் போது தான் கதாநாயகனுக்கும், அந்த கிடாவுக்குமான உறவையும், பிணைப்பையும் உணர்ந்தேன்.அதேபோல் கதாநாயகன் யுவன் கிருஷ்ணா களத்தில் கிடாவை, கட்டாரியாக நின்று ஏவியதை பார்க்கும்போதே என்னுடைய கதையின் நாயகனாக தெரிந்தார்.

மொத்தம் எனது மூன்று வருட உழைப்புக்கு பின்னர் இதில் நிஜமான கிடா சண்டைகளை காட்சிப்படுத்தியுள்ளேன். இந்த படத்தில், வில்லனுடைய கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. அதுவும் படத்தில், அவர் மூன்று வெவ்வேறு மிகவும் மூர்க்கத்தனமான கிடாக்களை கட்டுப்படுத்தி நடித்துள்ளார்.
இந்த படத்தின் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மது சூதன் ராவ் நடித்துள்ளார். மற்றும் சில தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர்.இப்படத்தின் ஒளிப்பதிவை உதயகுமார் கவனிக்க,சக்தி பாலாஜி தமிழ் கலாச்சார முறையிலான வாத்தியங்களை பயன்படுத்தி மிகவும் அருமையாக இசை அமைத்துள்ளார்” என்கிறார்..