
முனீஷ்காந்த் ,விஜயலட்சுமி, ராதாரவி, காளி வெங்கட் , மாளவிகா அவினாஷ் , வேல ராமமூர்த்தி, குரேஷி, கோடங்கி வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், மிடில் கிளாஸ். அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு, சுதர்சன் சீனிவாசன். இசை, பிரணவ் முனிராஜ்,
இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ நினைக்கும், கணவன் முனீஷ்காந்த். ஆடம்பரமாக வாழ ஆசைப்படும், மனைவி விஜயலட்சுமி. முனீஷ்காந்தின் சம்பளம் போதாத நிலையில், நடுத்தர குடும்பத்து பெண்கள் செய்யும், புடவை விற்பதில் தொடங்கி, யூடியூப் சேனல் வரை செய்து பணம் ஈட்ட முயற்சிக்கிறார், விஜயலட்சுமி. அனைத்திலும் தோல்வியும் மேற்கொண்டு கடனும் ஏற்படுகிறது. அதை அடைக்க முடியாமல் திணரும் சூழ்நிலையும் உருவாகிறது. அதோடு விஜலட்சுமி அவரது நெருங்கிய உறவினருக்கு சீர் செய்யும் நிலையும் வருகிறது.
முனீஷ்காந்த், ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்யும் போது, அவரது அப்பாவான வேல. ராமமூர்த்திக்கு, மார்வாடி ஒருவர், எழுதிக்கொடுத்த கடன் பத்திரம் ஒன்று கிடைக்கிறது. சந்தேகத்துடன், அந்த பத்திரத்தை எடுத்துக்கொண்டு மார்வாடியை சந்திக்கிறார், முனீஷ்காந்த். பத்திரத்தை வாங்கிக்கொண்டு, அந்த மார்வாடி 1 கோடி ரூபாய்க்கான செக்கினை கொடுக்கிறார். குடும்பமே சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறது.
முனீஷ்காந்த், அடுத்த நாள் அந்த செக்கினை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் செல்கிறார். செல்லும் வழியில் செக் தொலைந்து போகிறது. செக் கொடுத்த மார்வாடியும் இறந்து போகிறார். தொலைந்து போன செக் கிடைத்ததா? கடும் அதிர்ச்சிக்குளாகும், முனீஷ்காந்த், விஜயலட்சுமி வாழ்க்கை என்ன ஆனது? என்பது தான், மிடில் கிளாஸ்.
முனீஷ்காந்த், விஜயலட்சுமி இருவருமே அந்தந்த கதாபாத்திரங்களில் ஒன்றிப் போயிருக்கிறார்கள். முனீஷ்காந்த், மிடில் கிளாஸ் மனிதன் அல்லல் படும்பாட்டை, மனநிலையை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கோபப்படும் மனைவியை சமாளித்தபடி, அன்றாடும் நாட்களை நகர்த்தும் போதும் ரசிகர்களது மனதில் நிறைகிறார். கிடைக்கும் 1 கோடி ரூபாயில், தன் இஷ்டப்படி சொந்த கிராமத்தில் செட்டில் ஆகும் கனவுகளோடு வலம் வரும் காட்சி சிறப்பு. மனைவியிடம் சண்டையிட்ட பின்னர் கொஞ்சும் காட்சியும் ரசிக்கத் தக்கவைகளாக இருக்கிறது.
ஒரு சிலர் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் நடித்து, கைதட்டல்களை பெறுகிறார், விஜயலட்சுமி. புதிது புதிதாக வியாபாரம் தொடங்கும் போதும், உறவினர்களுக்கு, போட்டி போட்டு சீர்வரிசை செய்ய, கணவனை கட்டாயப்படுத்தும் போதும், பணம் கிடைக்கும் முன்பும், பின்பும் கடன்காரர்களை சமாளிக்கும் போதும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அல்ட்டிமேட்டாக, கணவனிடம் சண்டையிட்ட பின்னர், சமாதானப்படுத்தும் காட்சி ரசிக்கத்தக்கது. இந்தப்ப்டத்தில், விஜயலட்சுமி தனிப்பட்ட நடிப்பினை, சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றபடி, ராதாரவி, காளி வெங்கட் ,மாளவிகா அவினாஷ் ,வேல ராமமூர்த்தி, குரேஷி, கோடங்கி வடிவேலு ஆகியோர் குறிப்பிடத்தகுநத வகையில் நடித்துள்ளனர்.
சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவும், பிரணவ் முனிராஜ்ஜின் இசையும் படத்தின் பலம்.
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனைகளை சுவாரசியமாக, லாஜிக்கினை பற்றி துளியும் கண்டு கொள்ளாமல் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கியிருக்கிறார். இயக்குநர், கிஷோர் முத்துராமலிங்கம்.












